அடாஸ் காரை எல்லாம் ஊருக்குள்ளேயே விடகூடாது! திடீரென தடை போட்ட அரசு!
தற்போது ஆட்டோமொபைல் துறையில் அடாஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வரும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நாட்டில் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களை பரிசோதனை செய்த பிறகு இந்த தடை விளக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் தற்போது ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு விதமான வளர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது அடாஸ் தொழில்நுட்பம் தான். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கார்களில் அடாஸ் தொழில்நுட்பத்தை புகுத்தி பாதுகாப்பான காராக மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அடாஸ் தொழில்நுட்பத்திலேயே பல்வேறு லெவல்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது லெவல் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் அதிகமாக விற்பனையாகிறது.

இந்தியாவில் மூன்றாவது லெவல் அடாஸ் கார்கள் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. ஆனால் பல வெளிநாடுகளில் இந்த கார்கள் விற்பனையில் இருக்கின்றன. ஒவ்வொரு லெவல் அடாஸ் தொழில்நுட்பம் கூட கூட புதிய புதிய அம்சங்கள் சேரும். இதனால் அந்த வாகனம் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும் மற்றும் டிரைவர் சுலபமாக வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெறும்.
இந்நிலையில் கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த அடாஸ் தொழில்நுட்பம் லெவல் 3 கொண்ட கார்களை இயக்க அந்த மாகாண அரசு திடீரென தடை விதித்துள்ளது. இந்த அரசு கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி தனது மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தம் ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்த திருத்தம் அமலுக்கு வந்தது. இதன்படி லெவல் 3 அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார்களை அந்த மாகாணத்திற்குள் இயக்குவது சட்டப்படி குற்றமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெவல் 3 அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் எந்த காராக இருந்தாலும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் வாகன ஓட்டிகள் சாலையில் வாகனம் ஓட்டினாலும் அது சட்டப்படி குற்றம் தான். அந்த தொழில்நுட்பம் அந்த காரில் இருந்தாலே அதை அந்த மாகாணத்திற்குள் ஓட்ட அனுமதி இல்லை என அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

தற்போது அந்த நாட்டில் லெவல் 3 அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் காரும், அதே மெசிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இக்யூஎஸ் காரும் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட காராக கனடா நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த காரை வைத்திருப்பவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்குள் அந்த காரில் செல்ல முடியாது.
மீறி சென்றால் அந்த வாகன ஓட்டிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 21,000 முதல் ரூபாய் 1.21 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த குற்றத்தை செய்பவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கூட வழங்க உத்தரவிடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மாகாண அரசு சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்காக எடுத்துள்ளது.
இது குறித்தும் மாகாண அரசு அளித்த விளக்கத்தில் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த தொழில்நுட்பத்தை முற்றிலுமாக சோதனை செய்யாமல் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் தற்போது போக்குவரத்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருவதால் இதனால் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது.
பொதுமக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வுகள் போதிய அளவில் இருக்க வேண்டும். இதனால் இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்த பின்பு தான் இந்த தொழில்நுட்பத்தை அனுமதிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சோதனை முடிந்து முடிவு வரும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் அடாஸ் தொழில்நுட்பத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், குறிப்பிட்ட நாட்டில் அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார்களுக்கு தடை விதிக்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை இனி எப்படி மேம்படுத்துவது என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடாஸ் தொழில்நுட்பம் என்பது வாகன ஓட்டிக்கும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பாகவும் அதே நேரம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சோதனை செய்து முறையாக பின்பற்றினால் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது. இதை அம்மாகாண அரசு சோதனை செய்தால் விரைவில் இந்த தடையை நீக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









