மொபைல் போன் வாங்குற மாதிரி இந்த காரை வாங்க போறாங்க!! நம்ம ஊருக்கு இப்படியொரு இ-கார் வர மாட்டிங்குதே!
சீனாவை சேர்ந்த சிறிய கார் தயாரிப்பு நிறுவனமான ஷிஹிடு (Zhidou) புதியதாக ரெயின்போ மினி இவி என்கிற எலக்ட்ரிக் காரை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் குறைவான விலை ஆகும். அப்படி எவ்வளவு விலையில் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், இந்த எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பஞ்சமே கிடையாது. ஏனெனில், அந்த அளவிற்கு சீன சந்தை முற்றிலுமாக எலக்ட்ரிக்கை நோக்கி சாய்ந்து விட்டது. இதனால், முடிந்த வரையில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை வழங்க அங்குள்ள கார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

அந்த வகையில், ஷிஹிடு என்கிற கார் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காரை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஷிஹிடு ஆனது சிறிய அளவிலான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனால், ஷிஹிடு நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் விலை குறைவானவை ஆகவும், மக்கள் பலரும் வாங்கக்கூடியவை ஆகவும் விளங்குகின்றன.
இந்த நிலையில், ஷிஹிடு சீன மார்க்கெட்டில் புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கும் எலக்ட்ரிக் காரின் பெயர் 'ரெயின்போ மினி இவி' ஆகும். பெயருக்கேற்ப இந்த எலக்ட்ரிக் கார் மிகவும் சிறியதாக உள்ளது. இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், இந்த காரின் விலை ஆகும். சீனாவில் இந்த காரின் விலைகள் 4,400 டாலர்களில் இருந்து 6,000 டாலர்கள் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு வெறும் ரூ.3.6 லட்சம் - ரூ.5 லட்சம் மட்டுமே ஆகும். புதிய ஷிஹிடு ரெயின்போ மினி இவி எலக்ட்ரிக் காரின் நீளம் 3224மிமீ, அகலம் 1515மிமீ மற்றும் உயரம் 1630மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் வெறும் 2100மிமீ மட்டுமே ஆகும். இவ்வளவு சிறியதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதினால்தான் இந்த காரை இவ்வளவு குறைவான விலைக்கு விற்பனைக்கு கொண்டுவர முடிந்துள்ளது.
நம்ம ஊரில் விற்பனையில் உள்ள எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இது அதனை காட்டிலும் சிறிய அளவிலானது ஆகும். ரெயின்போ மினி இவி காரில் வெறும் 3 கதவுகள் மட்டுமே உள்ளன. இந்த காரில் 4 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

சிறிய அளவிலான கார்களை உருவாக்குவதில் உள்ள பிரச்சனையே அவற்றை வடிவமைப்பதாகும். ஆனால், ஷிஹிடு நிறுவனம் ரெயின்போ காரை மிகவும் ஸ்டைலாக வடிவமைத்துள்ளது. எம்ஜி கோமெட் இவி காரை காட்டிலும், இந்த எலக்ட்ரிக் கார் இன்னும் நிமிர்ந்த தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிக் டிப்பர் ஹெட்லைட்ஸ், கார்பன் ஃபைபர் மிரர்கள் மற்றும் Y-வடிவிலான எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை ரெயின்போ மினி காரின் வெளிப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
ரெயின்போ மினி இவி காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த காரின் சக்கரங்களில் வழங்கப்படும் வீல் கேப் ஆகும். பொம்மை கார்களில் வழங்கப்படுவதை போல், முழுவதும் மூடப்பட்ட டிசைனில் வீல் கேப் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. 20 கிலோவாட்ஸ்/ 85 என்.எம் அல்லது 30 கிலோவாட்ஸ்/ 125 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் உடன் இந்த எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம், உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இருப்பது சீனா ஆகும். ரூ.3.6 லட்சத்தில் ஒரு எலக்ட்ரிக் கார் என்பது நம் இந்தியாவிலேயே மிகவும் குறைவு எனும்போது சீன மக்களுக்கு 4,400 - 6,600 டாலர்கள் என்பது பெரிய விஷயமாகவே இருக்காது. ஆதலால், சீன மக்களை பொறுத்தவரையில், மொபைல் போனை வாங்குவது போல் இந்த எலக்ட்ரிக் காரை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications









