7 இருக்கைகள் கொண்ட காருக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கியது.. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இப்படி ஒரு எதிராளியா!!
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி நிஸான் (Nissan) நிறுவனத்தின்கீழ் மேக்னைட் (Magnite) எனும் ஒற்றை கார் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை மாற்றும் விதமாக நிஸான் நிறுவனம் ஓர் புதுமுக கார் மாடலை நாட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிஸான் எக்ஸ்-டிரையல் (X-Trail) மாடல்தான் அது. இந்த காருக்கு நிஸான் கார் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகஸ்டு 1ஆம் தேதி அன்றே இந்த கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிஸான் சமீபத்தில் இந்த காரை இந்தியாவில் வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே அறிமுகத்தை முன்னிட்டு ஒரு சில டீலர்கள் மட்டுமே இந்த புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். ஆமாங்க, அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றன.

நிஸான் நிறுவனம் இந்த கார் மாடலை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரை சிபியூ வாயிலாகவே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனால்தான் குறைவான எண்ணிக்கையில் இதை விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
எக்ஸ்-டிரையல், இது ஓர் ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். சிஎம்எஃப்-சி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த காரை நிஸான் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. ஆகையால், சொகுசு அம்சங்களுக்கும், பிரீமியம் அம்சங்களுக்கும் இந்த காரில் சற்றும் குறைச்சல் இருக்காது என நம்பப்படுகின்றது.
குறிப்பாக, ஏழு பேர் அமர்ந்து பயணித்தாலும் இந்த காரில் தாராளமான இட வசதி கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக காரின் அளவுகள் இருக்கின்றன. 4,680 மிமீட்டர் நீளம், 1,840 மிமீட் அகலம், 1,725 மிமீ உயரம் மற்றும் 2,705 மிமீ வீல்பேஸையே இந்த கார் கொண்டிருக்கின்றது.
இந்த அளவுகளே நிஸான் எக்ஸ்-டிரையல் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஜீப் மெரிடியன் (Jeep Meridian), எம்ஜி குளோஸ்டர் (MG Gloster) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) ஆகியவற்றிற்கு போட்டியாக வர இருக்கின்றது என்பது உறுதிப்படுத்தி இருக்கின்றது. அளவுகளில் மட்டுமல்ல சிறப்பம்சங்கள் விஷயத்தில் அதன் போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலை எக்ஸ்-டிரையல் வழங்கும் என்பது உறுதியாகி இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 8அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதியுடன் இந்த காரில் வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 12.3அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஒயர்லெஸ் சார்ஜல், 360டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டூயல் பேன் சன்ரூஃப், 50:50ஸ்பிளிட்-ஃபோல்டிங் வசதிக் கொண்ட மூன்றாம் வரிசை இருக்கை ஆகியவற்றையும் இந்த கார் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமில்லைங்க, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பன்முக டிரைவிங் மோட்கள், இபிபி வசதிக் கொண்ட ஆட்டோ ஹோல்டு, க்ரூஸ் கன்ட்ரோல், குரோம் ஹைலைட்டர்கள், அகலமான ஏர் இன்-டேக், எல்இடி லைட்டுகள், சுறா துடுப்பு போன்ற அன்டெனா போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற உள்ளன.
மேலும், பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் 7 ஏர் பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், முன் பக்கத்தில் பார்க்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன. எஞ்சினைப் பொருத்தவரை ஒற்றை மோட்டார் ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.
1.5 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்சினே எக்ஸ்-டிரையல் காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். பேடில் ஷிஃப்டர் வசதிக் கொண்ட சிவிடி கியர்பாக்ஸ் இந்த காரில் இடம் பெற இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் மேக்னைட் காருக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இருப்பை மேலும் விரிவுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற எக்ஸ்-டிரையல் கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








