சென்னை சாலையில் சென்ற விசித்திரமான வாகனம்!! வெறித்து பார்த்த வாகன ஓட்டிகள்... வைரல் வீடியோ!
நம் சென்னையில் வித்தியாசமான ஒரு ஃபோர்டு வாகனம் சாலையில் உலா வந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படாத இந்த ஃபோர்டு பிக்-அப் டிரக் வாகனம் ஒரு நாட்டில் பயங்கர ஃபேமஸாக உள்ளது. ஃபோர்டின் அப்படி எந்த வாகனம் இது என்பதையும், இதனை சென்னையில் பயன்படுத்தியுள்ளவரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியாவில் கடந்த காலங்களில் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. அவற்றில் சில, இந்திய கஸ்டமர்களை கவர முடியாமல் மார்க்கெட்டை விட்டு வெளியே சென்றுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த கார் நிறுவனம் ஃபோர்டு மோட்டார்ஸ் ஆகும். பிரபலமான அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருந்து 2021ஆம் ஆண்டின் இறுதியில் நடையை கட்டியது.

மீண்டும் இந்தியாவில் வணிகத்தை துவங்க ஃபோர்டு திட்டமிட்டு வருவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த நிலையில், சென்னையில் ஒரு சாலையில் ஃபோர்டு எஃப்150 ராப்டர் என்ற பிக்அப் டிரக் வாகனம் சென்றுள்ளது. இது தொடர்பான படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
மங்களகரமான நம் சென்னை சாலையில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட ஃபோர்டு எஃப்150 ராப்டர் வாகனம் பார்ப்பதற்கு விசித்திரமானதாகவும், அதேநேரம் புதுமையானதாகவும் உள்ளது. ஃபோர்டு எஃப்150 ராப்டர் ஆனது அமெரிக்க நாட்டில் மிக பிரபலமாக உள்ள பிக்அப் டிரக் வாகனம் ஆகும். அமெரிக்காவின் மத்திய மாகாணங்களில் நிலவும் வறண்ட சூழலுக்கு ஏற்ற வாகனமாக ஃபோர்டின் இந்த கம்பீரமான எஸ்யூவி வாகனம் விளங்குகிறது.
இந்த அமெரிக்க ஃபோர்டு வாகனம் இதற்குமுன் ஏற்கனவே சிலமுறை இந்தியாவில் சிலரால் சாலையில் பார்க்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த சமயங்களில் இந்த வாகனத்தில் நம்பர் பிளேட் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், தற்போது சென்னையில் இருந்து வெளியாகியுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த எஃப்150 ராப்டர் வாகனத்தில் கர்நாடகா மாநிலத்தின் நம்பர் பிளேட் இருப்பதை தெளிவாக காண முடிகிறது.
சென்னையில் சாலையில் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட அமெரிக்க பிக்அப் டிரக் வாகனம்... என்ன ஒரு ஆச்சிரியம். இந்த ஃபோர்டு டிரக்கின் உரிமையாளர் யார் என்பது இப்போது வரையில் நமக்கு தெரியவில்லை. நம் இந்தியாவிலும் இஸுஸு வி-கிராஸ் உள்பட சில பிக்அப் டிரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை எதுவும் ஃபோர்டு எஃப்150 டிரக்கின் அருகே நிற்க முடியாது. ஏனெனில், அவ்வளவு பெரிய தோற்றம் கொண்டது எஃப்150 ராப்டர் ஆகும்.

இந்தியாவில் பொறுத்தவரையில், ஃபோர்டு எண்டேவியர் ஒரு மிக பெரிய கார். தற்போது கிடைத்துள்ள வீடியோவில், இந்த எஃப்150 வாகனத்திற்கு பின்னால் ஒரு எண்டேவியர் கார் வருவதை பார்க்கலாம். எண்டேவியரை காட்டிலும் எஃப்150 ராப்டர் எந்த அளவிற்கு பெரியதாக உள்ளது என்பதை பாருங்கள். சென்னையில் காட்சி தந்துள்ள இந்த ஃபோர்டு எஃப்150 ராப்டர் வாகனம் நீல நிறத்தில் உள்ளது. அமெரிக்க மக்களும் எஃப்150 வாகனத்தை இத்தகைய பெயிண்ட்டில் வாங்கவே ஆசைப்படுகின்றனர்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் இந்த எஃப்150 ராப்டர் வாகனத்தின் படங்களும், வீடியோக்களும் மட்டுமே இணையத்தில் கிடைக்கின்றன. மற்றப்படி இது, எஃப்150 ராப்டர் பிக்அப் டிரக் வாகனத்தின் எந்த வேரியண்ட்? இதில் எந்த மாதிரியான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்கிற விபரங்கள் எதுவும் இல்லை. சர்வதேச மார்க்கெட்டில் எஃப்150 ராப்டர் வாகனம் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், எஃப்150 வாகனத்தை மொத்தம் 5 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் ஃபோர்டு விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 5 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது என்றால், எந்த அளவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஃபோர்டின் இந்த பிக்அப் டிரக் வாகனம் பிரபலமானதாக உள்ளது என்பதை அறியலாம். இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு நுழைய உள்ளதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. ஒருவேளை அது நடந்தாலும், எஃப்150 ராப்டர் வாகனத்தை இந்தியாவில் ஃபோர்டு அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.


Click it and Unblock the Notifications








