மாருதி சுஸுகி டிசையர் 33 கிமீ மைலேஜ் தரும்னு சொல்றாங்களே அது உண்மைதானா!! அராய் அமைப்பு சொன்னது என்ன?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் புதிய தலைமுறை டிசையர் (Dzire) கார் மாடலை இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி அன்றே இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த அறிமுகத்தை முன்னிட்டே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது புதிய தலைமுறை டிசையர் கார் மாடலை இந்தியாவில் வைத்து வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டையும் மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையிலேயே இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமில்லைங்க இந்தியர்களின் கவனத்தைக் கவரும் விதமாக இந்த காரின் மைலேஜ் திறன் பற்றிய விபரங்களையும் வெளியீடு செய்திருக்கின்றனர்.

புதிய மாருதி சுஸுகி டிசையர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த இரண்டும் என்ன மாதிரியான மைலேஜை வழங்கும் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த தகவலின் வாயிலாக சிஎன்ஜி ஆப்ஷனே மிக அதிக மைலேஜை வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
புதிய தலைமுறை டிசையர் ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 33.73 கிமீ வரையில் மைலேஜை வழங்குமாம். அதேவேளையில், இதன் பெட்ரோல் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியர்பாக்ஸை பொருத்து மைலேஜ் திறன் வெளிப்பாடு மாறுபடும்.
மேலும், இந்த மைலேஜ் விபரங்கள் அராய் சான்றளித்த அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். ஆகையால், இது எந்த சந்தேகமும் பட தேவையில்லை. அதேவேளையில், நிஜ வாழ்க்கை பயன்பாட்டின்போது இதைவிட சற்று குறைவான மைலேஜை வழங்கக் கூடும் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
இருப்பினும் டிசையர் கார் மாடலின் இந்த மைலேஜ் பற்றிய தகவல் இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, அதிகம் மைலேஜை நேசிப்போரின் கவனத்தை மிகப் பெரிய அளவில் இந்த தகவல் கவர்ந்திருக்கின்றது. ஆகையால், புதிய டிசையர் காருக்கு இந்தியாவில் டிமாண்ட் மிக அமோகமாகக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
அதேவேளையில், இந்த கார் மைலேஜ் தருவதில் மட்டுமல்ல சிறப்பம்சங்களைத் தாங்கயிருப்பதிலும் மிக சிறந்த வாகனமாக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மாருதி சுஸுகி இந்த காரை கூடுதல் பிரீமியம் அம்சம் தாங்கிய வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, இரட்டை நிறங்கள் கொண்ட இருக்கை ஆகியவற்றை மாருதி சுஸுகி இந்த காரில் வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, க்ரூஸ் கன்ட்ரோல், மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பிளைண்டு ஸ்பாட் மானிட்டர் மற்றும் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் புதிய தலைமுறை டிசையர் பெற்றிருக்கின்றது. புதிய டிசையர் நான்கு விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi), இசட்எக்ஸ்ஐ (ZXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXi +) ஆகியவையே அவை ஆகும்.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே எஞ்சினே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய டிசையர் என்ன விலையில் விற்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவலையும் மாருதி சுஸுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக மாறும்.


Click it and Unblock the Notifications








