ஆடி கார்களை வாங்க எப்போவுமே ஒரு கூட்டம் இருக்கு போல!! 2023இல் தெறிக்க விட்டிருக்காங்க!
ஆடி இந்தியா (Audi India) நிறுவனம் அதன் கார்களின் விற்பனையை கடந்த 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட டபுள் ஆக்கியுள்ளது. அப்படி எத்தனை ஆடி கார்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டன என்பதை பற்றியும், தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஆடி கார்களை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று ஆடி. ஜெர்மனி நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்றான ஆடி இந்தியாவில் நடந்து முடிந்த கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தம் 7,931 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2022ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஆடி கார்களின் எண்ணிக்கையை விட சுமார் 89% அதிகம் ஆகும்.

ஏனெனில், அந்த ஆண்டில் வெறும் 4,187 ஆடி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுவாவது பரவாயில்லை, 2021ஆம் ஆண்டில் 3,293 கார்களை மட்டுமே ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருந்த 2020ஆம் ஆண்டில் 1,639 ஆடி கார்கள் மட்டுமே விற்பனை.
இந்த எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2023ஆம் வருடத்தில் எத்தனை கார்களை ஆடி அதிகமாக விற்பனை செய்துள்ளது என்பதை அறியலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 2015ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டில்தான் ஒரு வருடத்தில் அதிக கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. 2015ஆம் ஆண்டில் சுமார் 11,192 கார்களை ஆடி விற்பனை செய்து இருந்தது.

அதற்கு முந்தைய, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் ஒரு வருடத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சொகுசு கார்களை ஆடி இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 7,931 ஆடி கார்களில் கிட்டத்தட்ட 2,401 ஆடி கார்கள் கடைசி 3 மாதங்களில், பண்டிகை காலத்தில் மக்களால் வாங்கப்பட்டவை ஆகும். இது 2022ஆம் ஆண்டின் கடைசி 3 மாத விற்பனை எண்ணிக்கையை விட 94% அதிகம் ஆகும்.
இவ்வாறான புது கார்களின் விற்பனையில் மட்டுமின்றி, ப்ரீ-ஓவ்ண்டு கார் விற்பனையிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் 62 சதவீத வளர்ச்சியை ஆடி பதிவு செய்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் க்யூ3 ஸ்போர்ட்பேக், க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் என மொத்தம் 3 கார்களை ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவை இல்லாமல், க்யூ8, க்யூ5 மற்றும் எஸ்5 கார்களின் புதிய லிமிடெட் எடிசன்களையும் ஆடி கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் லக்சரி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுள் 4இல் ஒருவர் ஆடி காரை தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. வழக்கமான, பிரபலமான ஆடி கார்களுக்கு மட்டுமின்றி, சொகுசு கார்கள் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரின் விற்பனையும் இந்தியாவில் 40% அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆடி இந்தியா நிறுவனம் அதன் முதல் அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை மும்பையில் பாந்த்ரா கர்லா காம்ப்ளக்ஸில் திறந்துள்ளது. சார்ஜ் ஸூன் நிறுவனத்துடன் இணைந்து ஆடி திறந்துள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் சுமார் 450 கிலோவாட்ஸ் திறனை கொண்டதாக உள்ளது. இந்த ஆடி சார்ஜிங் மையத்தில் சோலார் பேனல்களை கொண்ட மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் கார்களை இந்தியாவில் ஆடி விற்பனை செய்துள்ளது. இதனை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க ஆடி முயற்சிக்கும். இ-ட்ரான் போன்ற எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இனி அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை அதிக இடங்களில் நிறுவினால், எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை ஆடி அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications









