ஆடி கார் வாங்க நம்ம ஆளுங்க கிட்ட எங்கிருந்து பணம் இருக்குனு தெரியலயே!! டிமாண்ட் கொஞ்ச, கொஞ்சமா அதிகமாகுது!
ஆடி (Audi), உலகளவில் முன்னணி லக்சரி கார் நிறுவனங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று ஆகும். இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக விளங்கும் ஆடி, இந்த ஆண்டில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் பெரிய அளவில் சரிவை பதிவு செய்துள்ளது. அப்படி எத்தனை கார்களை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது என்பதையும், நம் நாட்டில் ஆடி விற்பனை செய்யும் கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் லக்சரி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக 3வது இடத்தில் ஆடி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்பு கடந்த சில வருடங்களாக வாகன விற்பனை ஆனது சீராகி வருகிறது. அந்த வகையில், ஆடி நிறுவனத்தின் கார்கள் விற்பனையும் குறிப்பிட்ட வேகத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்த 2024ஆம் வருடத்தில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால், ஆடி நிறுவனம் நடந்து முடிந்த இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் 2,477 கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது.
அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டின் இதே முதல் 6 மாதங்களில் 3,473 கார்களை ஆடி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் ஆடி கார்களின் விற்பனை ஆனது 28.68%, அதாவது 996 யூனிட்கள் குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள 2,477 கார்களில் 1,046 கார்கள் முதல் 3 மாதங்களிலும் (2024 ஜனவரி - மார்ச்), 1,431 கார்கள் அடுத்த 3 மாதங்களிலும் (2024 ஏப்ரல் - ஜூன்) விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டில் முதல் 3 மாதங்களில் சுமார் 1,950 கார்களை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் 904 கார்கள் குறைவாக ஆடி விற்பனை செய்துள்ளது. அதாவது, 2023இன் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஆடி கார்கள் விற்பனை ஆனது பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆடி கார்களின் விற்பனை ஆனது பெரிய அளவில் குறையவில்லை. 2023 ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 1,523 கார்களை விற்பனை செய்திருந்த ஆடி நிறுவனம் இந்த 2024ஆம் ஆண்டிலும் இதே 3 மாதங்களில் 1,431 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் ஆடி கார்கள் விற்பனை ஆனது வெறும் 6.04% மட்டுமே குறைந்துள்ளது.
இந்தியாவில், இந்த 2024ஆம் ஆண்டில் முதல் 3 மாதங்களை காட்டிலும் அடுத்த 3 மாதங்களில் 385 கார்களை ஆடி நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த அளவிற்கு, இந்த ஆண்டு துவக்கத்தில் ஆடி கார்களின் விற்பனை குறைந்து இருந்ததற்கு முக்கிய காரணம், ஆடி கார்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான பாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட இடையூறுகள் ஆகும்.
சப்ளை செயினில் ஏற்பட்ட அந்த இடர்பாடுகள் களையெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஆடி இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பல்பிர் சிங் தில்லோன், இந்த பிரச்சனை இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார். ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ3, க்யூ3 ஸ்போர்ட்பேக், க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்.எஸ்5 ஸ்போர்ட்பேக், ஆர்.எஸ் க்யூ8, க்யூ8 இ-ட்ரான், க்யூ8 ஸ்போர்ட்பேக், இ-ட்ரான் ஜிடி, ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி என மொத்தம் 15 கார்கள் ஆடி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 15 கார்கள் என்பதை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்க ஆடி நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதேபோல், சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்துவதில் ஆடி இந்தியா நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சப்ளை செயின் சீரடைந்து வருவதால், ஆடி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








