க்யூ7 எனும் பூ பூத்திருச்சு.. இனி பணக்காரர்கள் எனும் தேனீக்கள் மொய்க்க போகுது.. இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!
ஆடி (Audi) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக க்யூ7 (Q7) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனையே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஆடி. இதற்கு அறிமுக விலையாக ரூ. 88.66 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இரண்டு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும்.
க்யூ7 பிரீமியம் பிளஸ் (Q7 Premium Plus) மற்றும் க்யூ7 டெக்னாலஜி (Q7 Technology) ஆகியவையே அவை ஆகும். இந்திய பணக்காரர்களின் மிகவும் பிரியமான சொகுசு எஸ்யூவி ரக கார் மாடலே இந்த க்யூ7 ஆகும். இதனால்தான் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஆடி.

இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மிக சிறப்பான வரவேற்பை இரட்டிப்பாக்கும் பொருட்டே இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. டிசைன், சிறப்பம்சம் என பலவற்றில் மாற்றம் செய்தே இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களைக் இந்த மாற்றங்களை க்யூ7 காரில் ஆடி செய்திருக்கின்றது.
அந்தவகையில், புதிய கிரில்லை க் கொண்டு இந்த காரின் முன் பக்கத்திற்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கின்றது, ஆடி. தொடர்ந்து, மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், ஃப்ரெஷ் லுக் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த காரை அழகானதாக ஆடி மாற்றியிருக்கின்றது.
இந்த அம்சங்களினால் பூவை தேடி வரும் தேனீக்களைப் போல பணக்கார்கள் அதிகம் இந்த காரை நாடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே இந்த காருக்கு அழகான தோற்றத்துடன் சேர்த்து முரட்டுத் தனமான தோற்றமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஏர் இன்டேக் துளைகளே காருக்கு முரடன் போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது.
இத்துடன், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், டைனமிக் இன்டிகேட்டர்கள், ஆர்20 அலாய் வீல்கள் உள்ளிட்டவையும் இந்த காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரின் உட்பக்கத்திலும் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், பாங் மற்றும் ஓலுஃப்சன் பிரீமியம் 3டி சவுண்டு சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 19 ஸ்பீக்கர்களைக் கொண்ட 730 வாட்ஸ் திறன் ஆடியோ சிஸ்டம் ஆகும். இத்துடன், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய ஆடி ஃபோன் பாக்ஸ் ஆகியவையும் இந்த காரில் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்தே இந்த புதிய அம்சங்களை இந்த காரில் ஆடி சேர்த்திருக்கின்றது. இதேபோல், ஐந்து விதமான வண்ண தேர்வுகளிலும் இந்த காரை ஆடி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஷாகிர் கோல்டு (Sakhir Gold), வய்தோமோ ப்ளூ (Waitomo Blue), மைதோஸ் பிளாக் (Mythos Black), சாமுராய் கிரே (Samurai Grey) மற்றும் கிளாசியர் ஒயிட் (Glacier White) ஆகியவையே அவை ஆகும்.
இதேபோல் இன்டீரியருக்கும் இரண்டு விதமான வண்ண ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை சிடர் பிரவுன் (Cedar Brown) மற்றும் சைகா பீஜ் (Saiga Beige) ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 340 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இத்துடன், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜியும் இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கும். ஆடி க்யூ7 சொகுசு காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 5.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் பயணிகளின் சொகுசான டிராவலுக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக பார்க் அசிஸ்ட் வசதிக் கொண்ட 360 டிகிரி கேமிரா வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது பயணத்தை மட்டுமல்ல பார்க்கிங்கையும் பாதுகாப்பாக செய்ய உதவியாக இருக்கும். இதுதவிர, லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், 8 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளைசேஷன் போன்ற அம்சங்களையும் இந்த காரில் மிக அதிகளவில் வாரி வழங்கி இருக்கின்றது ஆடி நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலான இதனை இன்னும் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக மாற்றும் பொருட்டே இந்த மாதிரியான அம்சங்களை எல்லாம் க்யூ7-இல் ஆடி வழங்கி இருக்கின்றது. விற்பனைக்கு வந்த இந்த நாள்முதல் இந்த கார் இதுவரை 10 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








