பழங்கால கார்களை பற்றி அறிய ஆவலா!.. பெங்களூருவில் தொடங்கியது ஆட்டோமோட்டிவ் ராப்சோடி கண்காட்சி.. நுழைவு இலவசம்!
பெங்களூரில் உள்ள ஆர்ட் ஹவுஸ் கேலரி (Art Houz Gallery)-யில், "ஆட்டோமோட்டிவ் ராப்சோடி" (Automotive Rhapsody) எனும் கண்காட்சி தொடங்கி இருக்கின்றது. ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த கண்காட்சி நாளை (ஆகஸ்ட் 11) வரை நடைபெற இருக்கின்றது. பெலிண்டா பெர்னாண்டஸ் என்பவராலேயே இந்த நிகழ்ச்சி நிர்வகிக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்னவென்றால், இளவரசி விதிதா சிங் பர்வானியால், வாகனம் உலகம் சார்ந்து தயார் செய்யப்பட்ட கலைப் படைப்புகளே அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. பழங்கால கார்களின் அழகையும், வாகன உலகின் வரலாற்று சிறப்பையும் வெளிக்காட்டும் ஓவியங்களை இங்கே காண முடியும்.
மேலும், இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் சில ஓவியங்கள் ஆயில், வாட்டர் கலர் மற்றும் கரி துண்டு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இந்த ஓவியங்கள் குறித்தும், படைப்புகள் குறித்தும் இளவரசி விதிதா பார்வையாளர்களுக்கு விளக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் கலைப்படைப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து அறிந்துகொள்ள இளவரசி விதிதா உடன் ஈடுபடலாம்.

கண்காட்சிக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பொதுமக்கள் பார்வைக்கு தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவர். மகாராஜா யதுவீர் வாடியார், கலை வரலாற்றாசிரியர் டாக்டர் பிரமிளா லோச்சன் மற்றும் விண்டேஜ் கார் சேகரிப்பாளர் டாக்டர் ரவி பிரகாஷ் ஆகியோரின் தலைமையிலேயே இந்த நிகழ்ச்சி விளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக கூறியதைபோல இளவரசி விதிதாவின் கலைப்படைப்புகள் அனைத்தும் ஆட்டோமொபைல் உலகின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையிலேயே இருக்கின்றன. குறிப்பாக, விண்டேஜ் கார்களின் வரலாற்றையும், அவற்றின் அழகையும் வெளிக்காட்டும் வகையிலேயே அவரின் கலைப் படைப்புகள் இருக்கின்றன. மேலும், பழங்காலத்தில் இருந்த கார்கள் எப்படி இயங்கியிருக்கும் என்பது பற்றியும் இந்த கண்காட்சியில் விளக்கப்பட்டு இருக்கின்றது.

இளவரசி விதிதா சிங் பர்வானியின் இந்த பணிக்காக மகாராஜா யதுவீர் வாடியார் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தியாவின் வாகனக் கலைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டாடுவதிலும் அவர் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த நிகழ்வை நிர்வகித்ததற்காக ஆர்ட் ஹவுஸ் (ART HOUZ) மற்றும் ஆர்டெல்லா (ARTELLA)வைச் சேர்ந்தவருக்கும் அவர் தன்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஆர்டெல்லாவின் கூட்டு முயற்சியின் வாயிலாகவே, இளவரசி விதிதா சிங் பர்வானியின் விண்டேஜ் ஆட்டோமொபைல் சார்ந்த கலைப் படைப்புகளுக்கு உயிரளிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் சில விண்டேஜ் வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஷக்தி ஆட்டோகார்ஸ்-க்கு சொந்தமான சில சொகுசு கார்களும் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
இது கண்காட்சிக்கு கூடுதல் பிரமாண்டத்தை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெட்டிங்ஸ் பை ஷர்மிலா எனும் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வாயிலாகவே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது, கலை நிகழ்ச்சிக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்தது கவனிக்கத்தகுந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர். குறிப்பாக, முக்கிய பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வாகன ஆர்வலர்களே இந்த நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். வாகன உலகின் பாரம்பரியம் மற்றும் புதுமைகளை பற்றி அறிந்துக் கொள்ள இந்த கண்காட்சி உதவியதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளவரசி விகிதாவின் ஒவ்வொரு கலைப்படைப்பும் வாகன உலகின் பாரம்பரியத்தையும், முன்னேற்றத்தையும் எடுத்துரைக்கும் வகையில் இருக்கின்றன. தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி வாகன உலகிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக கருத்துகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வாகன உலகின் வளர்ச்சியை அறிந்துக் கொள்ள இந்த கண்காட்சி ஒரு அரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகின்றது. ஆகையால், கார் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டோரை இந்த நிகழ்ச்சி கவரும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








