பென்ஸ் நிறுவனத்தை கதிகலங்க வைக்க வரும் புது பிஎம்டபிள்யூ கார் - பணக்காரர்களை கவரும் எல்லா அம்சமும் இருக்கு!!
பிஎம்டபிள்யூ (BMW), ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான மார்க்கெட்டாக விளங்குகிறது. இதன் காரணமாகவே, நம் நாட்டில் புது, புது கார்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதை பிஎம்டபிள்யூ மறப்பதில்லை. இந்த வரிசையில், பிராண்ட்-நியூ பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் இந்தியாவில் புதியதாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லக்சரி செடான் காரின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் வருகிற ஜூலை 24ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, அப்போதுதான் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இது, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் 8வது தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும், புதிய 5 சீரிஸ் கார் லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, காருக்குள் கூடுதல் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய கஸ்டமர்கள் காருக்குள் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம் எனவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு ஏற்றவாறு இந்த கார் பார்த்து, பார்த்து கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காருக்கு இந்தியாவில் முன்பதிவுகள் ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாக இந்த காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
புக் செய்வதற்கு முன்னர் விருப்பப்பட்டால் வாடிக்கையாளர்கள் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 லாங் வீல்பேஸ் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தை இணையம் வழியாக விரிவாக காணலாம். அதுமட்டுமின்றி, பிஎம்டபிள்யூ360 ஃபைனான்ஸ் போன்ற எளிதான ஃபைனான்ஸ் ஆப்ஷன்களையும் புக்கிங்கின் போது கஸ்டமர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம் என பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூம் மூலமாகவும் இந்த காரை புக் செய்யலாம். புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த காரின் விலையை சற்று குறைவாக எதிர்பார்க்கலாம். ஏனெனில், இந்த கார் முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. நமது சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் தொழிற்சாலையில் புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் ஏற்கனவே சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. ஆனால், வலது-கை-டிரைவிங்கை கொண்ட முதல் நாடாக இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையில் இந்த காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸின் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரும், ஆடி ஏ6 காருக்கும் போட்டியாக இருக்கும்.
இந்தியாவில் எந்த என்ஜின் உடன் இந்த புதிய பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது தற்போதுவரையில் இன்னும் உறுதியாக தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆதலால், பிஎம்டபிள்யூவின் இந்த புதிய காருக்கு இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் பெரும் சவாலாக இருக்கும். ஆதலால், புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் விலை அதன் விற்பனையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, இந்த புதிய காரை இந்தியாவிலேயே உருவாக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டு இருப்பது உண்மையில் அருமையான முடிவாகும்.


Click it and Unblock the Notifications








