விலையை அறிவிச்சாச்சு... புக் பண்ண பணக்காரர்கள் ரெடியா இருக்காங்க!! பி.எம்.டபிள்யூவில் இப்படியொரு காரா...
பிஎம்டபிள்யூ க்ரூப் (BMW Group) இந்தியாவில் இன்று அதன் 4 புதிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் ஒன்று, மேம்படுத்தப்பட்ட 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் (5 Series Long Wheel Base) கார் ஆகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2வது லாங் வீல்பேஸ் காராக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 3 சீரிஸ் கிராண்ட் லிமௌசைன் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவிற்கு அடுத்து புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்படும் 2வது நாடு இந்தியா ஆகும். இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான 5 சீரிஸ் காரை லாங் வீல்பேஸ் வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இது 8வது தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஆகும். லாங் வீல்பேஸ் என்பதன் அர்த்தம் என்னவென்றால், காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு நன்கு தூரமாக இருக்கும்.

இதன்படி, வழக்கமான 5 சீரிஸ் காரை காட்டிலும் புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் ஆனது நன்கு நீளமானதாக உள்ளது. இதற்கேற்ப காருக்குள் கேபினும் நன்கு விசாலமானதாக அதிக இடவசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 530 எல்.ஐ எம் ஸ்போர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதி ஒளிரக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்கள் பின்னோக்கி வளைக்கப்பட்டது போன்று உள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் முன்பை விட ஸ்போர்டியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் பார்ப்பதற்கே கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

விற்பனையில் இந்த புதிய பிஎம்டபிள்யூ காருக்கு மெர்சிடிஸின் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் போட்டியாக உள்ளது. ஆனால், இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரில் எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு மேலே சிறிய கண்ணாடி ஜன்னல் வழங்கப்படுகிறது. அது இந்த 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரில் இல்லை. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் உட்புற கேபின் இரு நிறங்களில் காட்சியளிக்கிறது. இருக்கைகள், டோர் பேட்கள் உள்ளிட்டவை தரமானவைகளாகவும், சவுகரியமானவைகளாகவும் வழங்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
காருக்குள் முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 12.3 இன்ச்சில் டிஜிட்டல் தரத்தில் டிரைவருக்கான திரை மற்றும் 18 ஸ்பீக்கர்கள் உடன் பவர்ஸ் & வில்கின்ஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் நீளம் 5,175மிமீ, அகலம் 1,900மிமீ, உயரம் 1,520மிமீ, முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் (வீல்பேஸ்) 3,105மிமீ ஆகும். வழக்கமான 5 சீரிஸ் காரை விட இந்த காரின் வீல்பேஸ் 110மிமீ கூடுதல் நீளமானது. இதன் மூலமாக, வழக்கமான 5 சீரிஸ் காரை காட்டிலும் இந்த புதிய காரின் நீளமும் 145மிமீ அதிகமாக உள்ளது. கூடுதல் வீல்பேஸினால் கேபினில் இடவசதி அதிகமாக கிடைக்கும்.
குறிப்பாக, பின் இருக்கைகளில் அமர்பவர்கள் சவுகரியமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இடவசதியை பெற முடியும். அதிகப்பட்சமாக 258 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை கொண்ட இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கார்பனிக் பிளாக், மினரல் வெள்ளை மற்றும் பைடோனிக் நீலம் என்கிற 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லாங் வீல்பேஸ் கார்களை அறிமுகம் செய்வதில் சமீப காலமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் முனைப்புடன் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே, கடந்த சில மாதங்களிலேயே தற்போது 2வது லாங் வீல்பேஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. வரும் மாதங்களில் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









