பிஎம்டபிள்யூ இப்படி செய்யும்னு எதிர்பார்க்கல... சைலண்ட்டாக பெரிய வேலையை பார்த்து இருக்கு!!
பி.எம்.டபிள்யூ (BMW), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்கிறது. அதேநேரம், விற்பனையில் ஜொலிக்காத கார்களை பிஎம்டபிள்யூ விற்பனையில் இருந்து நிறுத்திக் கொள்வதையும் சில சமயங்களில் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு பிஎம்டபிள்யூ காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த பிஎம்டபிள்யூ கார் அது என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிஎம்டபிள்யூ உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டை காட்டிலும் இந்த 2024ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சமீபத்தில் கூட நமது செய்தித்தளத்தில் புள்ளி விபரங்கள் உடன் பார்த்திருந்தோம்.

இவ்வாறு பிஎம்டபிள்யூ கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது புது, புது சொகுசு கார்கள் இந்திய கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதாகும். சமீபத்தில் கூட, புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். முன்பு விற்பனையில் இருந்த 5 சீரிஸ் காரை காட்டிலும் கூடுதல் நீளமானதாக புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரை அறிமுகம் செய்ததை தொடர்ந்து 6 சீரிஸ் ஜிடி காரின் விற்பனையை இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரை போன்று 6 சீரிஸ் ஜிடி ஆனது நன்கு நீளமான, முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரத்தை கொண்ட கார் ஆகும்.

மற்றப்படி, 6 சீரிஸ் ஜிடி காரின் விற்பனை பெரியதாக குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல், ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் 1,428 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 120 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் துல்லியமாக பார்த்தால், நாள் ஒன்று சராசரியாக 4 பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சொகுசு கார்களை பொறுத்தவரையில், நாள் ஒன்றுக்கு 4 கார்கள் என்பது நல்ல விற்பனை எண்ணிக்கையே. இருப்பினும், 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் அறிமுகத்தினால், அதற்கு இடம் விடும் விதமாக 6 சீரிஸ் ஜிடி காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் ஆடி க்யூ5 கார்களை விட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
முதன்முதலாக 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் கடந்த 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்த பிஎம்டபிள்யூ காரில் அதிகப்பட்சமாக 258 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 190 எச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால், புதிய 5 சீரிஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் ஆப்ஷன் இன்னும் சில மாதங்கள் கழித்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 சீரிஸ் ஜிடி காரின் விற்பனை நிறுத்தத்தால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செடான் கார்கள் வரிசையில் 2-சீரிஸ், 3-சீரிஸ், 5-சீரிஸ் மற்றும் 7-சீரிஸ் கார்கள் மட்டுமே உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துவக்கம் என்ற ஒன்று இருந்தால், நிச்சயமாக அதற்கு முடிவு என்ற ஒன்றும் இருக்கும். பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் இந்தியாவில் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. அதன் இடத்தை நிரப்பும் விதமாக வேறொரு புதிய கார் வந்ததை அடுத்து, 6 சீரிஸ் ஜிடி காரின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் விற்பனையில் இருக்கும் வரையில், 6 சீரிஸ் ஜிடி கார் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே என்றாலும், இடையில் இந்த கார் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications








