என்ன காரை வாங்க அரசாங்கத்தின் அனுமதி வேண்டுமா!.. நாம இந்தியாலதான இருக்கோம்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), சமீபத்தில் இந்திய சந்தையில் அதன் புதிய 7 சீரிஸ் புரடெக்சன் (7 Series Protection) எனும் மாடலை காட்சிப்படுத்தியது. இது ஓர் லிமோசைன் வகை சொகுசு (Luxury Limousine) கார் மாடல் ஆகும்.

உலக அளவில் இந்த கார் ஜி73 (G73) எனும் பெயரில் அறியப்படுகின்றது. இந்த கார் குறிப்பாக, பெரும் பணக்காரர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு கார் மாடல் ஆகும். இது சொகுசான டிராவல் அனுபவத்தை மட்டுமல்ல மிக உயர்ந்த பாதுகாப்பு வசதியையும் வழங்கும் திறன் கொண்டது.

Bmw 7 protection

துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள், விடி விபத்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றிடம் இருந்தே நம்மை பாதுகாக்கும் திறன் கொண்டதே இந்த சொகுசு கார் மாடல் ஆகும். இதனால்தான், இந்த கார் மாபெரும் முக்கிய புள்ளிகளுக்கான வாகனம் என கருத்தப்படுகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் பிரதமர், வெளிநாட்டு முக்கிய பிரதிநிதிகள், நாட்டின் உயர் பொருப்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோருக்கான வாகனம் இதுவாகும்.

மேலும், முகேஷ் அம்பானி போன்ற விஐபிகள் மற்றும் அரசர்கள் போன்றவர்களுக்கான சொகுசு காராகவும் இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரடெக்சன் காட்சியளிக்கின்றது. இந்த காரை முழுமையாக கட்டமைக்கப்பட்ட தயாரிப்பாகவே பிஎம்டபிள்யூ இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஒரே ஒரு எஞ்சின் தேர்வு மட்டுமே இதில் வழங்கப்பட இருக்கின்றது.

அதேவேளையில், இந்த காரை அவ்வளவு சுலபமாக நினைத்த உடன் வாங்கிவிட முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை இந்தியாவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றால் அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும். உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே இந்த காரை உங்களால் வாங்கிப் பயன்படுத்த முடியும்.

அப்படியே அனுமதியைப் பெற்றுவிட்டாலும் இந்த கார் உடனடியாக உங்கள் கைகளில் வந்து சேர்ந்துவிடாது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறைந்தபட்சம் 6 முதல் 8 மாதங்கள் வரையாவது இந்த காரை கைகளில் பெற காத்திருக்க வேண்டும். பிஎம்டபிள்யூ இந்த காரை ஜெர்மனியில் டிங்கோல்ஃபிங்கில் உள்ள பிளாண்டில் வைத்தே தயாரிக்கின்றது.

இங்கிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கு பிஎம்டபிள்யூ ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. ஒரு வாரத்திற்கே 4 யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் மாடல் தயாரிக்கப்படுகின்றது. இதுமாதிரியான காரணங்களினாலேயே இந்த கார் ஆர்டர் செய்தபின்னரும் பல மாதங்கள் காத்திருப்பிற்கு பின்னர் கைகளுக்கு வரும் சூழல் தென்படுகின்றது.

எதிர்பார்ப்புகளின்படி இந்த காருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையை நிர்ணயிக்கலாம் என தெரிகின்றது. ஆனால், இன்னும் இதன் விலைகள் உறுதி செய்யப்படவில்லை. இதை வாங்க ஏன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

மிகவும் ஆபத்தான சூழல்களில் இருந்து காக்கும் திறனை இந்த கார் கொண்டிருப்பதன் விளைவாகவே கெடுபிடியான சூழல் இந்த கார் விஷயத்தில் தென்படுகின்றது. எனவே வழக்கமான டாடா, மாருதி மற்றும் ஹூண்டாய் கார்களைப் போல சுலபமாக பிஎம்டபிள்யூவின் இந்த காரை வாங்கிவிட முடியாது.

இதேபோல், வழக்கமான கார்களில் இல்லாத அம்சங்கள் பலவும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், கொடி தாங்கி கம்பி காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், ஃப்ளாஷ் லைட்டுகளும் காரின் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டிருக்கும். தொடர்ந்து தடை இல்லா இயக்கத்திற்காக இந்த காரில் 20 அங்குல அலாய் வீல்கள், பிரத்யேக மிஷ்லின் ஃபேக்ஸ் டயர்களுடன் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த டயர்கள் தீயிற்கு இரையாகாது, அதேவேளையில், அது அவ்வளவு எளிதில் பஞ்சரும் ஆகாது. பஞ்சரே ஆனாலும் அது காரை இயங்க அனுமதிக்கும். மணிக்கு 30 கிமீ முதல் 80 கிமீ வேகம் வரை இயங்க அது அனுமதிக்கும். இதேபோல், இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விண்ட்ஷீல்டு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் அதிக பாதுகாப்பு திறன்மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.

இவற்றை துப்பாக்கி குண்டுகளால்கூட துளைக்க முடியாது. மேலும், இதன் கதவுகளும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. அவை ஒவ்வொன்றும் 200 கிலோ எடைக் கொண்ட பாதுகாப்பு திறன்மிக்கவை ஆகும். இவ்வளவு அதிக எடைக் கொண்ட கதவை எப்படி கையாள்வது என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம்.

ஆனால், இதை நாம் நம் கைகளால் இயக்க தேவையில்லை. அனைத்திலும் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அது கதவை எளிதில் திறக்க மற்றும் மூட உதவுகின்றன. காருக்குள் இருந்து வெளிப்புறத்தில் நடப்பதை உளவுப் பார்ப்பதற்கான வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. விவிஐபியின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு இருக்கும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த காருக்கு புல்லட் ப்ரூஃப் திறன் வழங்குவதற்காக 10 மிமீ ஸ்டீலைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அடக்கு பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக புல்லட் மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை தாங்கிக் கொள்ளும் வசதி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரடெக்சனுக்கு கிடைத்திருக்கின்றது.

இதனால் 72 மிமீ ரைஃபில் மற்றும் ஸ்நைப்பர்களின் தாக்குதலைக்கூட தாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, காருக்குள்ளே ஒரு வேளை சிக்க நேரிட்டால் அப்போதும் நமக்கு பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் கிடைக்கும். குறிப்பாக, இதன் ஃப்யூவல் டேங்க் தானாக சீல் செய்யும் வசதியைக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், கார் தீயிற்குள் இறங்கி சென்றாலும் அதன் ஃப்யூவல் டேங்க் வெடித்து சிதறாது. இதுதவிர, விஷ வாயு தாக்குதலின்போது பாதுகாக்கும் விதமாக காருக்குள் ஆக்ஸிஜன் டேங்குகள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இது குறிப்பிட்ட நேரம் வரை ஆக்சிஜனை வழங்கி பயணியைப் பாதுகாக்கும்.

இதுதவிர தானாக மற்றும் மேனுவலாக கன்ட்ரோல் செய்யும் வசதிக் கொண்ட தீயணைப்பான்கள், ரேடியோ ரிசீவர்கள் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த கார் பாதுகாப்பதில் மட்டுமல்ல பயணத்தின்போது மிக சிறந்த அனுபவத்தை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இதற்காக சொகுசு மற்றும் நவீன கால அம்சங்கள் பல இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 14.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, 31.3 அங்குல 8கே தொழில்நுட்பம் கொண்ட திரை, பவர்டு முன் மற்றும் பின் பக்க இருக்கைகள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் சொகுசு அம்சங்களை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை 7 சீரிஸ் புரடெக்சன் கார் மாடலில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 530 பிஎச்பி மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. கியர்பாக்ஸை பொருத்த வரை 8 ஸ்பீடு ஆட்டோ டிரான்ஸ்மிஷனே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாகவே காரின் அனைத்து வீல்களுக்கும் இயக்க திறன் கடத்தப்படுகின்றது. இந்த காரில் பாதுகாப்பு வசதிகள் மிக அதிகம் என்பதால் அதிக எடையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும், வெறும் 6.6 செகண்டுகளிலேயே இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை அசால்டாக எட்டிவிடும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரடெக்சன் மாடலின் ஒட்டுமொத்த எடை 3.9 டன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தெரியாமல் இந்த வாகனம் மோதினால்கூட எதிரில் வரும் வாகனத்தின் நிலைமை மிக மோசமாக மாறிவிடும் என்பது இதன் வாயிலாகவே தெரிகின்றது. இதுபோன்று ஏகப்பட்ட விஷயங்களை இந்த கார் தனக்குள் உள்ளடக்கி இருப்பதானலேயே இதனை வாங்க இந்தியாவில் அரசாங்கத்தின் அனுமதி தேவை என கூறப்படுகின்றது. அதேவேளையில், பெரும் பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே இந்த காரை வாங்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 5:00 [IST]
English summary
Bmw 7 series protection highlights
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+