பிஎம்டபிள்யூ கார்களை வாங்கி குவிக்கும் அளவுக்கு மக்களிடம் பணம் கொட்டி கிடக்குதா? மாசத்துக்கு 1,000 கார்கள்!!
பி.எம்.டபிள்யூ (BMW), இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் லக்சரி கார்கள் பிஎம்டபிள்யூ பிராண்டில் இருந்துதான் விற்பனையாகுகின்றன. இத்தகைய கார் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரையில் விற்பனை செய்த கார்கள் விற்பனை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இது எந்தவொரு ஆண்டிலும் இல்லாத அளவிற்கு அதிகம் என கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜெர்மனியில் இருந்து பல்வேறு ஆட்டோமொபைல் க்ரூப்கள் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளன. அத்தகைய ஜெர்மன் க்ரூப் தான், பிஎம்டபிள்யூ குழுமம் ஆகும். இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து நம் நாட்டில் பிஎம்டபிள்யூ கார்கள், மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் ஒட்டுமொத்தமாக சுமார் 7,098 கார்கள் மற்றும் 3,614 பைக்குகள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இந்த 7,098 கார்களில் 6,734 பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் 364 மினி கார்கள் அடங்குகின்றன. இந்தியாவில் கார்கள் விற்பனையில் மட்டும் பிஎம்டபிள்யூ குழுமம் சுமார் 21% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இது இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பதிவானவை என்பதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை செய்யும் எல்லாமே விலையுயர்ந்த கார்கள் தான். இருப்பினும், அவற்றுள் விலைமிக்க லக்சரி கார்கள் என்று பார்த்தால், 7 சீரிஸ், ஐ7, எக்ஸ்7 மற்றும் எக்ஸ்.எம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்தியாவில் பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனையில் இவை மட்டும் 18% பங்களிப்பை தந்துள்ளன.

கடந்த 6 மாதங்களில் இவற்றின் விற்பனை ஆனது கடந்த 2023ஆம் ஆண்டை காட்டிலும் 17% அதிகரித்துள்ளது. இந்த 4 பிஎம்டபிள்யூ கார்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்டவை எக்ஸ்7 ஆகும். மறுப்பக்கம், பிஎம்டபிள்யூவின் லக்சரி எஸ்யூவி கார்கள் பிராண்டின் மொத்த விற்பனையில் சுமார் 54% பங்களிப்பை கொண்டுள்ளன. பிஎம்டபிள்யூ லக்சரி எஸ்யூவி கார்கள் விற்பனை ஆனது 24% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எஸ்யூவி காராக எக்ஸ்1 விளங்குகிறது. மொத்த பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனையில் எக்ஸ்1 19% பங்கை கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் பிஎம்டபிள்யூ செடான் கார் ஆகும். கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களில் 17% 3 சீரிஸ் ஆகும்.

பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்கள் மற்றும் மினி எலக்ட்ரிக் கார்கள் என இரண்டும் சேர்த்து, கடந்த 6 மாதங்களில் மொத்தம் 397 எலக்ட்ரிக் கார்கள் பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ குழுமத்தில் கார் வாங்குபவர்களுக்கு குறைந்த மாத தவணை திட்டங்கள், உத்தரவாதமான பணம் தள்ளுபடி, எளிமையான நிபந்தனைகள் உள்ளிட்டவை அடங்கிய நிதி சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் வாங்கப்படும் 10இல் 7 பிஎம்டபிள்யூ கார்கள் நிதி சேவைகள் மூலமாகவே வாங்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவில் நுழைந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவிய இடம் நம் சென்னை ஆகும். புனேவில் இந்த நிறுவனத்துக்கு கார் பாகங்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 6 மாதங்களில் 7,098 கார்கள் விற்பனை என்பது பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார் நிறுவனத்துக்கு பெரிய விஷயமாகும். அதாவது, மாதத்திற்கு சராசரியாக ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இவை இல்லாமல், 3,614 பைக்குகள் பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து இந்த 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









