சென்னை பி.எம்.டபிள்யூ ஆலையில் தயாராகுவதால் விலை குறைவு! உறுமல் சத்தமே வேற லெவலில் இருக்கும்!!
பிஎம்டபிள்யூ (BMW), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புதியதொரு பிஎம்டபிள்யூ கார் நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நம் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ.74.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு உலகளவில் முக்கியமான சந்தைகளுள் ஒன்றாக நமது இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாகவே, நம் நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய பிஎம்டபிள்யூ எப்போதோ துவங்கிவிட்டது.

ஏற்கனவே கூறியதுபோல், பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு நமது சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல பிஎம்டபிள்யூ கார்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அவற்றுள் ஒன்றாக இனி புதிய எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஏனெனில், இந்த காரை தான் ரூ.74.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் பிஎம்டபிள்யூவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களிலும், இணையத்தள பக்கத்திலும் துவங்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ இந்தியா நிதி சேவைகள் மூலம் புதிய எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நிதி சேவையின் மூலம் சொந்தமாக்கி கொள்ளலாம். இதற்காக அட்டகாசமான மாதத்தவணை திட்டங்கள் மற்றும் உத்தரவாதமான பை-பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூ கார்களுக்கே உண்டான ஸ்போர்டியான தோற்றத்தில் இந்த கார் உள்ளது. காரின் முன்பக்கம் மிகவும் அகலமாகவும், தாழ்வாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களில் நீல நிறத்தை பார்க்க முடிகிறது. முன்பக்கத்தை போன்று காரின் பின்பக்கமும் நன்கு அகலமாக பருத்த வடிவில் உள்ளது.
இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை டிராவிட் கிரே, பிளாக் சாப்பையர், ஃபையர் ரெட் மெட்டாலிக் மற்றும் ஆர்டிக் ரேஸ் ப்ளூ உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இவை அனைத்திலும், காரின் உட்புற கேபின் ஆனது எம் ஹைலைட்கள் உடன் கருப்பு வெர்னாஸ்கா லெதரால் அலங்கரிக்கப்பட்டு கிடைக்கும். காருக்கு உள்ளே புதிய 14.9-இன்ச் டிஜிட்டல் கர்வ் டிஸ்பிளே, அட்ஜெஸ் செய்யக்கூடிய லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி உடன் ஸ்போர்ட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், எம் ஸ்போர்ட்ஸ் ஸ்டேரிங் சக்கரத்தையும் இந்த காரினுள் வழங்கியுள்ளனர். மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், கேபினை சுற்றிலும் விளக்குகள், ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பெரிய அளவிலான கண்ணாடி மேற்கூரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காருக்கு பின்பக்கத்தில் 480 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைக்க நன்கு விசாலமான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரில் 3 லிட்டர், 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 374 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பெடில் ஷிஃப்டர்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோலை கொண்ட இந்த புதிய காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பக்காவான பிஎம்டபிள்யூ கார் என்று புதிய எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு மாடர்ன் தோற்றத்தில் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் காரின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்டிரைவ் காரை இந்தியாவில் நிறைய பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









