மாருதி காருலாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல.. லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும்.. விலையும் இவ்ளோதானா..
மைலேஜ் தருவதில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் தயாரிப்புகளை வேறு எந்த நிறுவனத்தின் கார் மாடல்களாலும் அடித்துக் கொள்ள முடியாது என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால், மாருதி சுஸுகியின் தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக மைலேஜை தரும் காரை சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) தயார் செய்திருக்கின்றது. அது சமீபத்தில் சியான் (Xian) எனும் நிகழ்ச்சியின் வாயிலாக இரண்டு கார் மாடல்களை வெளியீடு செய்தது. இரண்டும் மிக அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்ட ஹைபிரிட் கார்கள் ஆகும்.
கின் எல் டிஎம்-ஐ (Qin L DM-i) மற்றும் சீல் 06 டிஎம்-ஐ (Seal 06 DM-i) ஆகிய ஹைபிரிட் கார்களையே பிஒய்டி அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார்கள் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் உதவியினால் லிட்டர் ஒன்றிற்கே அதிகபட்சமாக 35 கிமீ வரையில் மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்த இரண்டு கார்களும் பிரத்யேகமாக சீன சந்தைக்காக உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே முதல் நாடாக தற்போது சீனாவில் இந்த புதுமுக ஹைபிரிட் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு பின்னரே உலக நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார்கள் பற்றிய கூடுதல் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கின் எல் டிஎம்-ஐ மற்றும் சீல் 06 டிஎம்-ஐ, இந்த இரண்டு கார் மாடல்களும் ஐந்து விதமான ட்ரிம்களில் சீன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். 99,800 யுவான்கள் தொடங்கி 139,800 யுவான்கள் வரை விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. அதாவது, ரூ. 11.5 லட்சம் தொடங்கி ரூ. 16.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இரண்டு கார் மாடல்களும் பல விஷயங்களில் ஒத்துப்போகின்றன. விலையில் தொடங்கி, சிறப்பம்சங்கள், திறன் வெளிப்பாடு உள்ளிட்ட பலவற்றில் அவை இரண்டும் ஒரே மாதிரியானவையேக் காட்சியளிக்கின்றன. அதேவேளையில், உருவம் மற்றும் ஸ்டைல் போன்ற சிலவற்றில் மட்டும் அவை இரண்டிற்கும் இடையில் லேசான வித்தியாசம் தென்படுகின்றது.
வெளிப்புற வடிவமைப்பு: கின் எல் டிஎம்-ஐ கார், டிராகன் முகத்தின் அழகியலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. பெரிய கிரில் மற்றும் குரோம் பட்டை ஆகியவற்றை இதன் முன் பக்கம் கொண்டிருக்கின்றது. இத்துடன், டிஆர்எல்களுடன் கூடிய நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் மற்றும் செதுக்கப்பட்ட வடிவத்திலான பானட்டையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
இதேபோல், பாரம்பரிய கதவு கைப்பிடிகள் மற்றும் குறைந்த சுயவிவரத்தைக் கொண்ட டயர்கள் ஆகியவற்றையும் இந்த கார் கொண்டிருக்கின்றது. ஸ்போர்ட்டி லுக்கிலான அலாய் வீல்களுடனேயே இந்த டயர் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்து இந்த காரின் கூபே தோற்றத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.
மேலும், வித்தியாசமான இணைக்கப்பட்ட வால் பகுதி மின்விளக்கும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இதைப் போலவே சீல் 06 டிஎம்-ஐ காரும் வடிவமைப்பில் சில தனித்துவமான சிறப்பம்சங்களைத் தாங்கி இருக்கின்றது. காருக்குள் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரம்: சீனாவின் புகழ்பெற்ற ஓவியங்களை பிரதிபலிக்கும் வகையில் இரு கார்களின் உட்பக்கமும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் 8.8 அங்குல எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் திரை மற்றும் சுழலும் வசதிக் கொண்ட 15.6 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது. இத்துடன், ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், மொபைல் போனையே சாவியாக பயன்படுத்தும் வசதி, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு போன்ற வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டி பைலட் எல்2 (DiPilot L2) டிரைவிங் அசிஸ்டெண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு கேமிரா, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட முன்பக்க பயணிகள் இருக்கை, சூடான மற்றும் காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரின் செயல்திறன் மற்றும் ரேஞ்ஜ் திறன்: இரண்டு செடான்களும் பிஒய்டி-இன் சமீபத்திய 5ஆம் தலைமுறை டிஎம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஏ உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஹைபிரிட் கார் என்பதால் ஐசிஇ (ICE) மோட்டாருடன் மின்சார மோட்டார் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த இரண்டும் இணைந்து ஒரு லிட்டருக்கே 35 கிமீ வரையில் மைலேஜ் தரும். சொல்லப் போனால் வெறும் 2.9 லிட்டர் எரிபொருளை நிரப்பினால் 100 கிமீ ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக ஹைபிரிட் சிஸ்டத்தின்கீழ் வழங்கப்பட்டு இருக்கும் 10.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே காரணமாக இருக்கின்றது.
வேரியண்டைப் பொருத்து பேட்டரி பேக் திறனும், ரேஞ்ஜ் திறனும் மாறுபடும். ஆரம்ப நிலையில் உள்ள இரண்டு வேரியண்டுகளும் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜையும், அடுத்தடுத்துள்ள மூன்று உயர் நிலை தேர்வுகளும் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இதுமாதிரியான ரேஞ்ஜ் திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் பலரின் கவனத்தை பிஒய்டி-யின் இந்த ஹைபிரிட் கார்கள் ஈர்த்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் இப்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இ6, அட்டோ 3 மற்றும் சீல் ஆகியவையே அவை ஆகும். இவற்றின் வரிசையில் விரைவில் தன்னுடைய ஹைபிரிட் கார்களையும் அது அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








