ஒரு ஆள மிஸ் பண்ணாம குடும்பத்துல இருக்க எல்லாரையும் இந்த ஒரே காருல கூட்டிட்டு போகலாம்.. புக்கிங் தொடங்கிருச்சு!
சீனாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), ஒரு குடும்பம் ஒன்றாக அமர்ந்து போகின்ற மாதிரியான ஓர் பெரிய மற்றும் அதிக இருக்கைகளைத் தாங்கிய கார் மாடலை நாட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த காரின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அக்காருக்கான புக்கிங் பணிகளை பிஒய்டி தொடங்கி இருக்கின்றது. இ-மேக்ஸ்7 (eMAX7) எனும் எலெக்ட்ரிக் காருக்கே அது புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இந்த காரை இந்தியாவில் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளையும் அது தொடங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று (செப்டம்பர் 21) முதலே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ரூ. 51 ஆயிரம் முன் தொகையிலேயே காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமா சில சிறப்பு திட்டங்களையும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
அதாவது, முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆஃபர்களையும், சிறந்த பலன் திட்டங்களையும் வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது. ஆனால், அது முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் அக்டோபர் 8 ஆம் தேதியுடன் இந்த சலுகையும் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக இ6 (e6) இருக்கின்றது. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே இந்த இ-மேக்ஸ்7 ஆகும். புதுப்பித்தலின்கீழ் புதிய அம்சங்களைச் சேர்த்ததோடு, அதற்கு புதிய பெயரையும் பிஒய்டி சூட்டியிருக்கின்றது.
இந்த காருக்கு எம்6 (M6) என்கிற பெயரே சூட்டப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்த பெயரிலேயே அது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்தியாவிற்கு அது புதிய பெயரிலேயே வரும் என்பதை நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது. இந்த காரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது பிஒய்டி-இன் விற்பனையகங்கள் வாயிலாக புக் செய்துக் கொள்ள முடியும்.
குடும்பங்களுக்கு ஏற்ற இ-காராக இதனை தயார் செய்திருப்பதாக பிஒய்டி அறிவித்திருக்கின்றது. மேலும், இந்த காரில் நிறுவனத்தின் அசத்தலான டெக்னாலஜிகளான பிளேட் பேட்டரி மற்றும் 8-இன்-1 வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டிரெயின் ஆகியவற்றை வழங்கி இருப்பதாக பிஒய்டி தெரிவித்திருக்கின்றது. இத்தகைய வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் பிஒய்டி தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.
மேலும், அதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சிறப்பு சலுகைகளையும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு அது அறிவித்திருக்கின்றது. அந்தவகையில், முன் தொகையாக செலுத்தும் ரூ. 51 ஆயிரத்திற்கான சிறந்த பலன்களையும், 7 kW, 3 kW சார்ஜரை இலவசமாக வழங்கவும் அது திட்டமிட்டு இருக்கின்றது.
இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த காரை பிஒய்டி நிறுவனம் அடுத்த ஆண்டே டெலிவரிக் கொடுக்கும் என தெரிகின்றது. 2025 மார்ச் 25க்குள் இந்த வாகனத்தின் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. ஆகையால், இப்போது இந்த காரை புக் செய்தாலும் அதை கைகளில் பெற அடுத்த ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் காதலர்கள் மத்தியில் இதற்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே குடும்பங்களுக்கான வாகனமாக இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் காரை அது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








