இந்த சீன நிறுவனம் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்ட் போலிருக்கே.. காரை புக் செய்யவே இவ்ளோ ரூபாயை முன்தொகையா கேக்குது
சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, சீல் (Seal) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். ஏற்கனவே இந்தியாவில் இந்த நிறுவனம் இ6 மற்றும் அட்டோ3 எனும் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவை இரண்டும் எலெக்ட்ரிக் கார் மாடல்களே ஆகும். இவற்றுடனேயே மூன்றாவதாக சீல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது, பிஒய்டி. இ6 இந்தியாவின் எம்பிவி வாகன பிரிவின் தாகத்தையும், அட்டோ3 இந்தியாவின் எஸ்யூவி தாகத்தை தீர்க்கும் வகையில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பான சீல் இந்தியாவின் செடான் (Sedan) பிரிவை மையப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இந்த காரையே வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது, சீன நிறுவனம் பிஒய்டி. இந்த நிலையிலேயே இந்த காருக்கான புக்கிங் பணிகளை சீன நிறுவனம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ. 1 லட்சம் முன் தொகையிலேயே இந்த காருக்கான புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. இன்னும் இந்த காருக்கான விலைகள் அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்தின்போது அதன் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 55 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காரை சிபியூ வாயிலாகவே பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே இந்த அளவு அதிக விலையில் அது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் டெலிவரி பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கப்பட இருக்கின்றன. ஓர் முழு சார்ஜில் அந்த கார் 570 கிமீ தூரம் பயணிக்கும்.
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் 230 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பிஒய்டி சீல் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ரியர் ஆக்ஸிலில் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது ஓர் அதிக திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் ஆகும். வெறும் 6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையே இந்த மோட்டார் கொண்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவே பிஒய்டி சீல் செடான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இவி6 மற்றும் வால்வோ சி4 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும், சீல் கார் மாடலே இந்தியாவிற்கான பிஒய்டி-யின் முதல் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் ஏகப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், காருக்குள் ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட 15.6 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய இரு இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 10.25 அங்குல டிரைவருக்கான திரை, இரண்டு ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 8 வழிகளில் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கை (மெமரி அம்சத்துடன்), ஹெட்ஸ்-அப் திரை, ஹீட் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், இந்த சீல் காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும். அந்தவகையில், 8 ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், அடாஸ் அம்சம் ஆகியவையே இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய சீல் எலெக்ட்ரிக் கார், அட்டோ3 எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு மேலே உள்ள இடத்திலேயே நிலை நிறுத்தப்பட இருக்கின்றது. ஆகையால், விலையிலும் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இதை பெஸ்ட்டாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, டாடா நெக்ஸானை போல பாதுகாப்பு தருவதில் இந்த கார் மாடல் சிறந்து விளங்கும்.


Click it and Unblock the Notifications








