டெஸ்லாவுக்கே ஒரு சீன நிறுவனம் தண்ணி காட்டுது என்றால் பெரிய விஷயம்! இந்தியாவிலும் கார் சேல்ஸ் பண்ணுது!!
எலக்ட்ரிக் கார் (Electric Car), எதிர்காலத்தில் உலகளவில் தனி நபரின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, தற்போது இருக்கும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் தான் சாலை முழுவதும் செல்லும் என பல அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனை வேகமாக நிஜமாக்கி வருவது அமெரிக்காவின் டெஸ்லா ஆகும். ஆனால், முதல்முறையாக வருவாயில் டெஸ்லாவை சீனாவின் பிஒய்டி முந்தி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டெஸ்லா, பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் என்பதும், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கின் கீழ் செயல்படுவதும் நம் எல்லாருக்குமே தெரியும். அமெரிக்காவில் என்று மட்டுமின்றி, உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டெஸ்லா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, நம் அண்டை நாடான சீனாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகிலேயே மிகவும் போட்டி மிகுந்த சந்தையாக சீனாவை சொல்லலாம். சீனாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மக்கள் தயாராகிவிட்டனர் என்றாலும், இந்த நாட்டில் போட்டி மிகவும் அதிகமாகும். இருப்பினும், மற்ற சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களை டெஸ்லா சிறப்பாகவே சமாளித்து வருகிறது. சீனாவில் மட்டுமின்றி, உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டெஸ்லாவுக்கு போட்டியாக விளங்கும் நிறுவனம் பிஒய்டி ஆகும்.
சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் பிஒய்டி கடந்த ஜூலையில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலான கார்கள் விற்பனை மூலம் 20 ஆயிரத்து 110 கோடி யுவான் வருவாயை ஈட்டியுள்ளது. யுவான் என்பது சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நாணயம் ஆகும். மேலே குறிப்பிடப்பட்ட தொகையின் இந்திய ரூபாய் மதிப்பு 2 லட்சத்து 37 ஆயிரத்து 555 கோடி ஆகும்.
இது கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் பிஒய்டி ஈட்டிய வருவாயை விட சுமார் 24% அதிகமாகும். மறுப்பக்கம், டெஸ்லாவை பொறுத்தவரையில், இந்த உலகளாவிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் 2024 ஜூலை- செப்டம்பரில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 895 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதன்படி பார்த்தால், டெஸ்லாவை காட்டிலும் பிஒய்டி நிறுவனம் ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

இருப்பினும், டெஸ்லாவின் வருவாயும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிஒய்டி நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மற்ற கார் நிறுவனங்களை போன்று பெட்ரோல் & டீசல் கார்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து முழுவதுமாக எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் கார்களை மட்டுமே விற்பனை செய்யும் முடிவிற்கு பிஒய்டி வந்தது; அதாவது பெட்ரோல்/ டீசல் கார் எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை.
சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் ஹைப்ரீட் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனெனில், அவற்றுள் ஒரு சில ஹைப்ரீட் கார்கள் 2,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு நிற்காமல் ஓடக்கூடியவைகளாக உள்ளன. இந்த ஆண்டு ஜூலை- செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 11.2 லட்ச எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் கார்களை பிஒய்டி உலகளவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 21% அதிகமாகும். நம் இந்தியாவிலும் சில பிஒய்டி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வருவாய் அதிகரித்து இருப்பதை போன்று, அதன் மூலம் கிடைக்கும் இலாபமும் பிஒய்டி நிறுவனத்துக்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதேநேரம், டெஸ்லா நிறுவனமும் 2024 ஜூலை- செப்டம்பரில் 18 ஆயிரத்து 499 கோடி ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. நடப்பு 2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 315 கோடி ரூபாய் வருவாயில் இருந்து 29 ஆயிரத்து 766 கோடி ரூபாய் இலாபத்தை பிஒய்டி பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோஸ்வேகன், ஃபோர்டு மோட்டார், ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என பல முன்னணி & பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களை அமெரிக்காவின் டெஸ்லாவும், சீனாவின் பிஒய்டி நிறுவனமும் ஓரங்கட்டியுள்ளன. இருப்பினும், ஹைப்ரீட் கார்கள் மூலமாக டெஸ்லாவை பிஒய்டி முந்துகிறது. ஹைப்ரீட் கார்கள் தான் பிஒய்டி நிறுவனத்திற்கு அதிக வருவாயை தருகின்றன.


Click it and Unblock the Notifications








