சிங்கிள் சார்ஜில் 650 கிமீ ஓடும் கார்! எதோ படத்துக்கு புக் பண்ற மாதிரி எல்லாரும் புக் பண்ணீட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிஒய்டி சீல் (BYD Seal) எலெக்ட்ரிக் கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சரியாக சொல்வதென்றால், கடந்த மார்ச் 5ம் தேதி பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து சுமார் 15 நாட்கள் மட்டுமே ஆகின்றன.
அதற்குள்ளாக பிஒய்டி சீல் கார் புதிய மைல்கல் (New Milestone) ஒன்றை கடந்துள்ளது. 500 யூனிட்கள் முன்பதிவு என்பதுதான் அந்த மைல்கல் (500 Units Booking Milestone) ஆகும். 500 கார்கள் முன்பதிவு என்பது பெரிய சாதனையா? என சிலர் கருதலாம். ஆனால் இது மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும்.

இந்திய சந்தையில் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 41 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 53 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரை அதற்குள்ளாக இவ்வளவு பேர் முன்பதிவு செய்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.
பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார், 61.44 kWh மற்றும் 82.56 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 61.44 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 510 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 82.56 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 580 கிலோ மீட்டர்கள் (ஆல் வீல் டிரைவ்) மற்றும் 650 கிலோ மீட்டர்கள் (ரியர் வீல் டிரைவ்) ஆகும்.

15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் என பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில், ஏராளமான அதிநவீன வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.
பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதும் எளிமையானதுதான். 150 kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 37 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதே நேரத்தில் 11 kW சார்ஜர் பயன்படுத்தினால், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரம்புவதற்கு சுமார் 9 மணி நேரம் ஆகும்.
இந்திய சந்தையில் நேரடி போட்டி இல்லை என்றாலும் கூட, ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), கியா இவி6 (Kia EV6) மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுடன், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை உயர்ந்த ஒன்றாக இருந்தாலும் கூட, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையே, முன்பதிவு எண்ணிக்கை காட்டுகிறது. சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிநவீன வசதிகள் போன்றவைதான், இந்த வரவேற்பிற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








