வெறும் ரூ.41 லட்சத்தில் தரமான சீன எலக்ட்ரிக் கார்! போட்டிக்கு ஹூண்டாய் & கியால விற்கப்படும் எலக்ட்ரிக் கார்கள்
பிஒய்டி (BYD) நிறுவனம் அதன் 3வது எலக்ட்ரிக் காராக சீல் இவி (Seal EV) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மற்ற 2 எலக்ட்ரிக் கார்களை போல் இல்லாமல், சீல் இவி சற்று விலைமிக்க எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாம் எதிர்பார்த்த அளவுக்கு சீல் இவி காரின் விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது, அறிமுகத்திற்கு முன்னதாக இந்த எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.50 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்த கார் ரூ.41 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டைனமிக், ப்ரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் கிடைக்கும். இதில் டைனமிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.41 லட்சம் ஆகும்.

மற்ற இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.45.50 லட்சம் மற்றும் ரூ.53 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டைனமிக் மற்றும் பிரீமியம் வேரியண்ட்கள் ரியர்-வீல்-டிரைவ் கார்களாகவும், பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் மட்டும் ஆல்-வீல்-டிரைவ் காராகவும் கிடைக்கும். இந்தியாவில் விற்பனையில், பிஒய்டி சீல் இவி எலக்ட்ரிக் காருக்கு கியா இவி6, ஹூண்டாய் ஐயோனிக் 5, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் பிஎம்டபிள்யூ ஐ4 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.
ஆனால் நேரடி போட்டி என்று பார்த்தால், ஹூண்டாய் ஐயோனிக் 5 மட்டுமே ஆகும். ஏனெனில் இந்த ஹூண்டாய் எலக்ட்ரிக் காரின் விலை மட்டுமே பிஒய்டி சீல் மாடலுக்கு இணையாக ரூ.46.05 லட்சமாக உள்ளது. மற்றவைகளின் விலைகள் பல லட்ச ரூபாய்கள் அதிகமாக உள்ளன. சீல் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டிற்கு வால்வோவின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரும் விற்பனையில் போட்டியாக இருக்கும்.

ஏனெனில், இந்த வால்வோ எலக்ட்ரிக் காரின் விலை ஆனது ரூ.57.90 லட்சமாக தற்சமயம் உள்ளது. சீல் பெர்ஃபார்மன்ஸ் காரை போன்று, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்ட காராகும். கியாவின் இவி6 எலக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.61 லட்சம் - ரூ.66 லட்சமாக உள்ளன. இந்தியாவில் விலை குறைவான பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரான ஐ4 -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.5 லட்சம் ஆகும்.
அதாவது, பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டை காட்டிலும் சுமார் ரூ.30 லட்சம் அதிகமானது பிஎம்டபிள்யூ ஐ4 ஆகும். ஆனால், இந்த அதிகப்படியான விலைகளுக்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் கார்களில் ஆற்றல்மிக்க பேட்டரி ஆப்ஷன்களும், எலக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்படுகிறது. பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரின் எண்ட்ரீ-லெவல் டைனமிக் வேரியண்ட்டில் 61.44 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் கிடைக்கும்.

அதுவே, பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்களில் சிறிது ஆற்றல்மிக்க 82.56 kWh பேட்டரி கிடைக்கும். ஆனால், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்களின் டிரைவ் சிஸ்டம் வேறுப்படுவதால், காரின் ரேஞ்சும் வேறுப்படுகிறது. பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டை காட்டிலும் சற்று அதிகமாக 650கிமீ வரையிலான ரேஞ்சை பிரீமியம் வேரியண்ட்டில் பெறலாம்.

மறுப்பக்கம், ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா இவி6 எலக்ட்ரிக் கார்களில் 77.4 kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. 53kWh பேட்டரி ஆப்ஷனிலும் ஐயோனிக்-5 எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இந்த கொரியன் எலக்ட்ரிக் கார்கள் உலகின் சிறந்த ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன. இத்தனைக்கும், பிஒய்டி நிறுவனத்தின் பிளேட் பேட்டரி டெக்னாலஜி வழங்கப்பட்டாலும் இந்த ஹூண்டாய், கியா எலக்ட்ரிக் கார்கள் அளவிற்கு ரேஞ்ச் கிடைப்பதில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனத்திலும் அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.33 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இருப்பினும், இதனை காட்டிலும் சற்று அதிக விலையில் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் ஏற்றதாகும். பிஒய்டி எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்து காரை வாங்கவும். ஏனெனில், ஹூண்டாய் & கியா நிறுவனங்கள் சார்ஜிங்கிற்கு பெரிய நெட்வொர்க்கை கட்டியெழுப்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications









