தமிழ்நாட்டில் தயாராகும் காரின் பெயரை மாற்றிய சிட்ரோன்!! இந்த விலைக்காகவே இன்னும் நிறைய பேர் வாங்க போறாங்க!
சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் சி3 ஏர்கிராஸ் (C3 Aircross) காரின் பெயரில் இருந்த சி3 -ஐ நீக்கி வெறும் 'ஏர்கிராஸ்' என்கிற பெயரில் அந்த காரை அப்டேட் செய்து இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், வெறுமனே சிட்ரோன் ஏர்கிராஸ் என அழைக்கப்பட உள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் காரின் விலைகள் உள்பட இந்த காரை பற்றிய முக்கியமான விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் களமிறங்கியது. முதல் காராக சி5 ஏர்கிராஸை அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் சிட்ரோனின் பயணம் சி3 காரின் அறிமுகத்திற்கு பிறகே துவங்கியது. ஏனெனில், காம்பெட்டான உடலமைப்பில், குறைந்த விலையில் சிட்ரோன் சி3 அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், சி3 ஏர்கிராஸ் காரை சிட்ரோன் அறிமுகம் செய்தது.

சி3 காருடன் ஒப்பிடுகையில் சி3 ஏர்கிராஸ் காரின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தது. இந்திய மார்க்கெட்டிற்கு புதுமையான தோற்றத்தை கொண்டிருந்ததால், சி3 ஏர்கிராஸ் காரின் மீது சிட்ரோன் இந்தியா நிறுவனம் கூடுதல் நம்பிக்கையை வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட காரின் பெயரில்தான் தற்போது சிட்ரோன் நிறுவனம் அதிரடியான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
சி3 ஏர்கிராஸ் காரின் பெயரிலிருந்து 'சி3' நீக்கப்பட்டு, 'ஏர்கிராஸ்' மட்டும் வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்துடன், காரிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி காருக்கான புக்கிங்குகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன.

புக் செய்தவர்களுக்கு புதிய ஏர்கிராஸ் கார்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அக்டோபர் 8ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் ஜென்-3 ப்யூர்டெக் 110 டர்போ மற்றும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் 82 நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் எஸ்யூவி காரை வாங்கலாம்.
இதில் டர்போ பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் பெறலாம். யு, பிளஸ் மற்றும் மேக்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யு வேரியண்ட் ஆனது நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும். இதனால் இந்த வேரியண்ட்டை ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் பெற முடியாது.

இந்த வேரியண்ட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.8.49 லட்சம் ஆகும். பிளஸ் வேரியண்ட் 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இதனால், இந்த வேரியண்ட்டை ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் வாங்க முடியும். இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.13.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேக்ஸ் வேரியண்ட்டை டர்போ என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.7 லட்சம் மற்றும் ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலைகள் யாவும் 5 இருக்கைகள் உடன் புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் காரின் விலைகள் ஆகும். கூடுதலாக இரு இருக்கைகள் உடன் 7-சீட்டர் வெர்சனாக இந்த காரை வாங்க விலை உடன் சேர்த்து கூடுதலாக ரூ.35,000 செலுத்த வேண்டும் என சிட்ரோன் அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க சிட்ரோன் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. தற்போது சி3 ஏர்கிராஸ் காரின் பெயரில் மாற்றம் ஏற்படுத்தி இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விருப்பப்படுவோர் புதிய ஏர்கிராஸ் எஸ்யூவி காரை சிட்ரோனின் ஷோரூம்களில் அல்லது சிட்ரோனின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் புக் செய்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









