ரூ.8.5 லட்சத்தில் மீண்டும் ஒரு புதிய கார்! எதை வாங்குவது என்றே ஒரே குழப்பமா இருக்கே!!
சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் ஏர்கிராஸ் (Aircross) காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. 'எக்ஸ்ப்ளோரர் எடிசன்' (Xplorer Edition) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சிட்ரோன் கார் பிரத்யேகமான தோற்றத்தில், கூடுதலான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிசன் மட்டுமே ஆகும். அதாவது, குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் இந்தியாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க கடந்த சில வருடங்களாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளின் ஒருபகுதியாக, சி3 ஏர்கிராஸ் காரை குறைந்த விலையில் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. நம் நாட்டில் இப்போதுவரையில் ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகி உள்ள சிட்ரோன் கார், சி3 ஏர்கிராஸ் ஆகும்.

இப்படிப்பட்ட காரின் பெயரில் சிட்ரோன் சமீபத்தில் ஓர் அதிரடியான மாற்றத்தை செய்தது. அதாவது, சி3 ஏர்கிராஸ் காரின் பெயரில் இருந்த 'சி3'-ஐ நீக்கிவிட்டு வெறும் 'ஏர்கிராஸ்' என அழைக்க ஆரம்பித்துள்ளது. இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1 மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இது ஒரு லிமிடெட் எடிசன் ஆகும். அதாவது, குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த கார் விற்பனையில் இருக்கும். இந்த புதிய காரில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டேஷ்கேம்.

அதாவது, காருக்குள் டேஸ்போர்டுக்கு மேலே கேமரா கிடைக்கும். இதுமட்டுமின்றி, காருக்குள் தரைப்பகுதியில் விளக்குகள், ஒளிரக்கூடிய சில் பிளேட்கள், வுட் கார்னிஷ், பாடி டிகால்கள் உள்ளிட்டவற்றையும் ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசனில் பெறலாம். இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் வெளிப்பக்கத்தில் நீல நிற பெயிண்ட்டில் ஆங்காங்கே காக்கி நிறத்தையும் பார்க்க முடிகிறது. இந்த காக்கி நிறத்தை அலாய் சக்கரங்களிலும் பார்க்க முடிகிறது.
இவற்றுடன், காருக்குள் பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுப்போக்கு திரையையும் ஆப்ஷனாக பெறலாம். ஸ்டாண்டர்ட் பேக் மற்றும் ஆப்ஷ்னல் பேக் என 2 விதமான பேக்குகளுள் ஒன்றுடன் புதிய ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசன் காரை வாங்கலாம். இதில் ஸ்டாண்டர்ட் பேக்கின் விலை ரூ.24,000 ஆகவும், ஆப்ஷ்னல் பேக்கின் விலை ரூ.51,700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் ஒரு பேக்கை பெற விரும்புபவர்கள் காரின் விலை உடன் சேர்த்து இந்த தொகையை செலுத்த வேண்டும்.

இதில், ஆப்ஷ்னல் பேக்கை பெறுவதன் மூலமாகவே பின் இருக்கை பயணிகளுக்கு பொழுதுப்போக்கு திரையை பெற முடியும். விருப்பப்படுவோர், புதிய ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசன் காரை சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது இந்தியா முழுவதும் உள்ள சிட்ரோனின் 86 லா மைசன் ஷோரூம் வாயிலாகவோ புக் செய்து பெறலாம்.
சிட்ரோன் ஏர்கிராஸில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றப்படி, டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இந்த இரு பெட்ரோல் என்ஜின்களுள் ஒன்றுடன் புதிய ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசனை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் சிட்ரோன் கார் ஏர்கிராஸ் ஆகும். இதனால்தான், முடிந்தவரையில் இந்த காரின் புது, புது ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்ய சிட்ரோன் விரும்புகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஏர்கிராஸ் எக்ஸ்ப்ளோரர் எடிசன் அதன் ஸ்டைலான தோற்றத்தினால் வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









