டாடா கார்கள் வரிசையில் இணைந்த சிட்ரோன் பசால்ட்.. பாதுகாப்பை தருவதில் குல தெய்வங்களுக்கே டஃப் கொடுக்கும் போல!
சிட்ரோன் (Citroen) நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல்களில் பசால்ட் (Basalt)-ம் ஒன்றாகும். இது ஓர் கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலையே பாரத் என்சிஏபி (Bharat NCAP) சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இதன் முடிவுகளே தற்போது வெளியாகி உள்ளன. சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்பை பாரத் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள் ரேட்டிங்கையே தற்போது பெற்றிருக்கின்றது.
இந்த ரேட்டிங்கின் வாயிலாக தான் ஓர் பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல் என்பதை பசால்ட் உறுதி செய்திருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 32 புள்ளிகளுக்கு 26.19 என்கிற அதிகபட்ச புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 35.90 என்கிற அதிகபட்ச புள்ளிகளையுமே பசால்ட் எஸ்யூவி பெற்றிருக்கின்றது.

இத்தகைய அதிக மதிப்பெண்களைப் பெற்றதன் விளைவாகவே அக்காருக்கு நான்கு ஸ்டார்களை பாரத் என்சிஏபி வாரி வழங்கி இருக்கின்றது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது. மிக முக்கியமாக ஆறு ஏர்பேக்குள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மற்றும் அனைத்து பயணிகளுக்கும் மும்முனை சீட் பெல்ட் ஆகியவையும் சிட்ரோன் பசால்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்களினாலேயே இந்த கார் மோதல் ஆய்வில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்றுக் குவித்திருக்கின்றது.
இந்த மதிப்பெண் வாயிலாக பசால்ட் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு வரும் நாட்களில் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இதுவரை டாடா மோட்டார்ஸின் கார்கள் மட்டுமே மோதல் ஆய்விற்கு உட்படுத்தி வந்த நிலையில் பாரத் என்சிஏபி முதல் முறையாக சிட்ரோன் நிறுவனத்தின் தயாரிப்பையும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது.
அடுத்து வரும் நாட்களில் இந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளையும் பாரத் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் முடிவுகளையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இந்தியாவில் விற்கப்படும் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கான கார்களை இந்தியாவிலேயே வைத்து அதன் தரங்களை ஆய்வும் செய்யும் விதமாக இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்டதே பாரத் என்சிஏபி என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவரை இந்த அமைப்பு டாடாவின் முக்கிய தயாரிப்புகளான ஹாரியர் (Harrier), சஃபாரி (Safari), பஞ்ச் இவி (Punch EV) மற்றும் நெக்ஸான் இவி (Nexon EV) ஆகிய கார் மாடல்களை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியிருந்தது.
இந்த பட்டியலிலேயே தற்போது சிட்ரோன் பசால்ட் இணைந்திருக்கின்றது. இதன் வரிசையில் அடுத்ததாக மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரும் அடுத்ததாக இணைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 7.99 லட்சம் என்கிற விலையிலேயே இந்தியாவில் பசால்ட் கூபே எஸ்யூவி ரக கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களிலேயே சிட்ரோன் பாசல்ட் கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் சிட்ரோன் பசால்ட்-ம் ஒன்றாகும். இந்த காரே தற்போது பாதுகாப்பிலும் சிறந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது. மைலேஜ் மற்றும் விலையைக் காட்டிலும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றே பாதுகாப்பு திறன். இதில், பசால்ட் சிறந்தது என்பதே தற்போது உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









