சிட்ரோன் பசால்ட் மாடலின் உயர்நிலை தேர்வுகளின் விலையும் கம்மிதானா.. டாடா, மாருதிக்கே டஃப் கொடுப்பாங்க போலையே!
பிரபல பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), சமீபத்தில் பசால்ட் (Basalt) காரை யாரும் நம்ப முடியாத குறைவான விலையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பே இந்த கார் மாடல் ஆகும். இது ஓர் எஸ்யூவி கூபே (SUV Coupe) வகை கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலுக்கு ரூ. 7.99 லட்சம் எனும் மிக மிக குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த கார் மாடல் ஒட்டுமொத்தமாக 3 வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். யு (You), பிளஸ் (Plus) மற்றும் மேக்ஸ் (Max) ஆகியவையே அவை ஆகும். இதில் யு-தான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதுவே ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதன் விலை மட்டுமே அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே மற்ற வேரியண்டுகளின் விலையை சிட்ரோன் எப்போது அறிவிக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, சிட்ரோன் நிறுவனம் பசால்ட் கார் மாடலின் மற்ற தேர்வுகளின் விலையையும் அறிவித்து இருக்கின்றது.
நிறுவனம் பசால்ட் கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டைப் போலவே மற்றவைக்கும் குறைவான விலையையே நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்தவகையில், பிளஸ் வேரியண்ட், 1.2 நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் கொண்ட தேர்விற்கு ரூ. 9.99 லட்சமும், 1.2 லிட்டர் டர்போ பிளஸ் (Turbo Plus) தேர்விற்கு ரூ. 11.49 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 1.2 லிட்டர் டர்போ ஆட்டோமேட்டிக் பிளஸ் (Turbo AT Plus) தேர்விற்கு ரூ. 12.79 லட்சமும், உயர் நிலை வேரியண்டான 1.2 லிட்டர் டர்போ மேக்ஸ் (Turbo MAX) தேர்விற்கு ரூ. 12.28 லட்சமும், இதே ஆப்ஷனின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட தேர்விற்கு அதிகபட்சமாக ரூ. 13.62 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
பிரீமியம் அம்சங்கள் நிறைந்த இந்த கார் மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் இந்த விலையானது சற்றே குறைவுதான் என கூறப்படுகின்றது. மேலும், இந்த கார் மாடலுக்கு இப்போதைக்கு நேரடி போட்டிகள் எதுவும் இல்லை. விரைவில் டாடா கர்வ் (Tata Curvv) எனும் ரூபத்தில் பசால்ட்-க்கு போட்டி விரைவில் களமிறங்க இருக்கின்றது.
வருகின்ற செப்டம்பர் மாதத்திலேயே டாடா கர்வ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், இதன் மின்சார வெர்ஷனை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நாட்டில் களமிறக்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடல் விற்பனைக்கு வரும் வரை எஸ்யூவி கார் பிரிவில் உள்ள மற்றவை பசால்ட்க்கு போட்டியாக இருக்கும்.
அந்தவகையில், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் ஹோண்டா எலிவேட் (Honda Elevate) உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.
இந்த காரில் சிறப்பம்சங்களாக கிளைமேட் கன்ட்ரோல், விரைந்து கேபினை குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி துவாரங்கள், அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கை, எல்இடி ஹெட்லைட், ஸ்டோரேஜ் வசதிக் கொண்ட ஆரம்ரெஸ்ட், ஆறு ஏர் பேக்குகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த காரில் ஆம்பியன்ட் லைட், சன்ரூஃப், வெண்டிலேட் வசதி போன்றவை வழங்கப்படவில்லை. இதன் பூட் ஸ்பேஸ் 470 லிட்டர் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் மலிவு விலை கார் மாடல்கள் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே முன்னதாக சி3 எனும் கார் மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. இப்போது பசால்ட் கார் மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








