சிட்ரோன் பசால்ட் வெளியீடு! இன்னும் விற்பனைக்கே வரல அதுக்குள்ள டாடா கர்வ்-க்கு போட்டி தயாராகிருச்சா!
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), இந்தியாவில் தன்னுடைய இருப்பை பலப்படுத்தும் விதமாக ஓர் புதுமுக கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. பசால்ட் (Basalt) எனும் கார் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி கூபே (SUV coupe) வகை கார் மாடல் ஆகும். சமீப சில காலமாக டீசர் படங்கள் வாயிலாக இந்த காரின் மீதான கவனத்தை ஈர்த்து வந்தநிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக சிட்ரோன் வெளியீடு செய்திருக்கின்றது.
இது, நிறுவனத்தின் இந்தியாவிற்கான ஐந்தாவது தயாரிப்பு ஆகும். வெகு விரைவிலேயே இதனை சிட்ரோன் விற்பனைக்கும் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான தொடக்க புள்ளியாக இன்றைய தினம் பசால்ட் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சீக்கிரமே இந்த காருக்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக சிறப்பான அலங்கரிப்பைக் கொண்ட கார் மாடலாக சிட்ரோன் பசால்ட் காட்சியளிக்கின்றது. குறிப்பாக இதற்கு அழகு சேர்க்கும் விதமாக 'வி' வடிவ ஸ்பிளிட் வகை எல்இடி டிஆர்எல்-கள், ஸ்பிளிட் வகை கிரில் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுவே மற்ற கார்களிடமிருந்து பசால்ட்டை வேறுபடுத்தியும், கவர்ச்சியானதாகவும் காட்சியளிக்க செய்கின்றது.
இத்துடன், இரண்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட அலாய் வீல், எல்இடி டெயில் லைட், கருப்பு நிற பம்பர் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவையும் இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க அதன் உட்பக்கமும் மிகவும் அழகானதாகவே காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், தனித்துவமான அம்சங்கள் கொண்ட டேஷ்போர்டு, இரட்டை டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், விரைவாக குளிரூட்டும் வசதிக் கொண்ட ஏசி துளைகள், வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட லெதர் இருக்கை போர்வைகள் ஆகியவற்றாலேயே பசால்ட்-இன் உட்பக்கம் அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் பயணிகளுக்கு சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமான அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், 87 மிமீட்டருக்கு அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி, பின் பக்க இருக்கைக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே நெருக்கமாக அமர்ந்துக் கொண்டு பணிக்கின்ற அனுபவத்தை இந்த காரில் தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும், தொழில்நுட்பம் மற்றும் அதிக பிரீமியமான பயண உணர்வும் இந்த காரில் பயணிகளுக்கு கிடைக்கின்ற வகையில் வழி வகைச் செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், 10.2 அங்குல தொடுதிரை சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜிங் கருவி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் பசால்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கிடும் பொருட்டும் பல்வேறு உயிர் காக்கும் அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
சிறப்பம்சங்களைப் போலவே எஞ்சின் விஷயத்திலும் இந்த கார் வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் இரண்டு விதமான மோட்டார் தேர்வுகளை சிட்ரோன் வழங்க இருக்கின்றது. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகியவையே அவை ஆகும்.
இதில் முதல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். மேலும், இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் ஒரு லிட்டருக்கு 18 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
இதற்கு அடுத்தபடியாக இருப்பது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகும். இது 110 பிஎஸ் மற்றும் 205 என்எம் டார்க்கை உருவாக்கும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏடி ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மைலேஜை பொருத்த வரை 18.7 கிமீ முதல் 19.5 கிமீ வரையில் இது மைலேஜை வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காருக்கு நேரடி போட்டி இப்போதைக்கு இல்லை. அதேவேளையில், விரைவில் டாடா கர்வ் எனும் ரூபத்தில் இந்த காருக்கு போட்டி வர இருக்கின்றது. இதுதவிர, எஸ்யூவி கார் பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவையும் போட்டியாக அமைய உள்ளன.


Click it and Unblock the Notifications








