பின் சீட்ல ஒக்காருபவர்களும் சொகுசா போகலாம்.. வெளியீட்டின் வாயிலாக சிட்ரோன் பசால்ட் பற்றி தெரிய வந்த தகவல்கள்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் பசால்ட் (Basalt) கார் மாடலை நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது. இந்த வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த காரை சிட்ரோன் நிறுவனம் வெளியீடு செய்தது. இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான ஐந்தாவது தயாரிப்பு ஆகும். மேலும், இது ஓர் எஸ்யூவி கூபே வகை கார் மாடலும்கூட. இந்த பிரிவில் பெரிய அளவில் போட்டியே இல்லாத நிலையே தென்படுகின்றது. அதேநேரத்தில், இந்த நிலை ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், சீக்கிரமே இந்த காருக்கு நேரடி போட்டியாளனாக டாடா மோட்டார்ஸ்-இன் புதுமுக தயாரிப்பான கர்வ் விற்பனைக்கு வர இருக்கின்றது. எனவே இந்த கார் மாடல்களால் சந்தை சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பசால்டு எஸ்யூவி கார் பிரிவில் மிகப் பெரிய புரட்சியைச் செய்யும் என நம்பப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அக்காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் காட்சியளிக்கின்றன. இந்த பதிவில் நேற்றைய தினம் அரங்கேறிய பசால்ட் வெளியீட்டு நிகழ்வின் வாயிலாக, அக்கார் பற்றி தெரிய வந்த சில முக்கிய தகவல்களையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
காரின் உட்பக்கமும், சிறப்பம்சங்களும்: உட்பக்கம் பிரீமியம் அம்சங்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, சி3 ஏர்கிராஸ் கார் மாடலில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதிலும் காண முடிகின்றது. இதுதவிர சில தனித்துவமான அம்சங்களையும் பசால்ட் கார் மாடலில் காண முடிகின்றது. கிளைமேட் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய ஏசி துவாரங்கள், அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கை, எல்இடி ஹெட்லேம்ப், ஆரம்ரெஸ்ட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுதவிர, ஆறு ஏர் பேக்குகள் இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், இந்தியர்களின் பிரியமான அம்சமான ஆம்பியன்ட் லைட், சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்களை இதில் காண முடியவில்லை. இதன் பூட் ஸ்பேஸ் 470 லிட்டர் ஆகும்.
எஞ்சின் தேர்வுகள்: சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை வழங்க இருக்கின்றது. ஆனால், இரண்டுமே பெட்ரோல் எஞ்சின்கள் ஆகும். இந்தியாவில் இப்போதும் டீசலுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. ஆனால், இதனை பசால்ட்டில் சிட்ரோன் வழங்கவில்லை. இதேபோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட்-க்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆப்ஷன்களும் பசால்ட்-இல் வழங்கப்படவில்லை.
மாறாக பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. முதல் ஒன்று 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பிரேட்டட் எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 82 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 18 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்கும்.
இரண்டாவது எஞ்சின் ஆப்ஷனாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 110 பிஎஸ் மற்றும் 205 என்எம் டார்க்கை உருவாக்கும். கியர்பாக்ஸ் ஆப்ஷனாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏடி ஆகியவற்றை இதில் சிட்ரோன் வழங்க இருக்கின்றது. மைலேஜை பொருத்த வரை 18 கிமீ முதல் 19.5 கிமீ வரையில் இது வழங்கும்.
வண்ண தேர்வு: பசால்ட் ஆறு விதமான வண்ண தேர்வுகளில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. அதேவேளையில், ஆறு தேர்வுகளில் ஒன்று வெள்ளை மற்றும், மற்றொன்று சிவப்பாக இருக்கும் என்பது மட்டும் தெரிய வந்திருக்கின்றது. சமீபத்திய டீசர் மற்றும் வெளியீட்டு நிகழ்வின் வாயிலாகவே இதுவும் தெரிய வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், அனைத்து வண்ண தேர்வுகளும் இந்த காருக்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையிலேயே இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்னும் சில அம்சங்கள் இருக்கின்றன. டோர் கை பிடி, ஃபாஸ்ட் பேக் ரூஃப்லைன், வீல்களுக்கு கருப்பு நிற கிளாடிங் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
போட்டியும், அறிமுக விபரமும்: பசால்டு காருக்கு நேரடி போட்டியாளனாக டாடா கர்வ்-வே அமைய இருக்கின்றது. இந்த கார் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இதன் வருகையை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இதுதவிர, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவையும் பசால்ட்-க்கு போட்டியாக சந்தையில் இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பசால்ட் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பசால்ட் கார் மிக அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய காராக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் வருகை என்ன மாதிரியான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இது விற்பனைக்கு வரும்போதே அதுபற்றிய தகவல் தெரிய வரும். குறிப்பாக, இது டாடா கர்வ்-க்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








