டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்... பாத்த உடனே எல்லாருக்கும் வாங்கணும்னு தோணும்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று சிட்ரோன் (Citroen). இந்த நிறுவனம் சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) என்ற பெயரில் புத்தம் புதிய கார் ஒன்றை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
சிட்ரோன் பசால்ட் கார், கான்செப்ட் (Concept) வடிவில் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில், இந்த காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் மாடல், தயாரிப்பிற்கு உகந்ததாக இருக்கிறது. எனவே புதிய சிட்ரோன் பசால்ட் காரை, கூடிய விரைவில் நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடலின் முன் பகுதியில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைன் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஓஆர்விஎம்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பின் பகுதி டிசைனை பொறுத்தவரையில், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ஸ்டாப் லேம்ப் ஆகிய அம்சங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட கான்செப்ட் வெர்ஷனுக்கும், தற்போது சாலைகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடலுக்கும் இடையே வெளிப்புற டிசைனில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
வசதிகளை பொறுத்தவரையில், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கிடைமட்டமான ஏசி வெண்ட்கள் ஆகிய அம்சங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது சிட்ரோன் பசால்ட் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

பசால்ட் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) குறித்த விபரங்கள் எதையும் சிட்ரோன் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் சிட்ரோன் பசால்ட் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 109 பிஹெச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) காரில் இதே இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிட்ரோன் பசால்ட் காரில் இந்த இன்ஜின் உடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் (Tata Curvv) போன்ற கார்களுடன், சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி கார் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி கார் நடப்பு 2024ம் ஆண்டின் 2வது பாதியில் விற்பனைக்கு வரவுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டிருப்பது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கி வருவதையே உணர்த்துகிறது. எனவே புதிதாக கூபே எஸ்யூவி காரை வாங்கலாம் என திட்டமிட்டுள்ளவர்கள், சிட்ரோன் பசால்ட் காரின் வருகைக்காக காத்திருக்கலாம்.
சிட்ரோன் நிறுவனம் பசால்ட் காரை தொடர்ந்து, இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மொத்தம் 4 கார்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








