டாடா மோட்டார்ஸ் அனைத்திலும் ஒரு ஸ்டெப் முன்னாடி இருக்கு! இந்திய காருக்கு முன் பிரெஞ்சு கார் தாக்கு பிடிக்குமா?
சிட்ரோன் (Citroen) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் பசால்ட் விஷன் எஸ்யூவி கார் கான்செப்ட்டை வெளியீடு செய்துள்ளது. இந்த சிட்ரோன் பசால்ட் கான்செப்ட் வாகனத்தை பார்க்கும்போது, உடனே நமக்கு டாடா மோட்டார்ஸின் பிரபலமான கர்வ் கான்செப்ட் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த இரு கான்செப்ட் வாகனங்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் சிட்ரோன் நிறுவனம் சி5 ஏர்கிராஸ் காரின் மூலம் நுழைந்தது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் மிடில்-கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய விலையில் சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், சி3 கார்களை போன்ற மற்றொரு பட்ஜெட் விலை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணிகளில் சிட்ரோன் ஈடுப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டதே பசால்ட் விஷன் கான்செப்ட் ஆகும். கான்செப்ட் என்பது புதியதாக உருவாக்கப்படும் கார்களின் ஆரம்ப கட்ட தோற்றம் ஆகும். அதாவது, கான்செப்ட்டை மாடலை அடிப்படையாக கொண்டே பின்னர் காலத்தில் கார்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய சிட்ரோன் பசால்ட் விஷன் கான்செப்ட்டின் மூலமாக எஸ்யூவி கார் புதியதாக உருவாக்கப்பட உள்ளது.
தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய சிட்ரோன் பசால்ட் மற்றும் டாடா கர்வ் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக உள்ளன. விற்பனையில் உள்ள சி3 ஏர்கிராஸ் காரின் முன்பக்கத்துடன், புதிய பசால்ட் விஷன் கான்செப்ட்டின் முன்பக்கம் ஒத்து போகிறது. முன்பக்க பம்பரின் டிசைனில் மட்டும் சில வித்தியாசங்கள் தென்படுகின்றன. மறுப்பக்கம், டாடா கர்வ் கான்செப்ட்டின் டிசைன் ஹைலைட்களை விற்பனையில் உள்ள ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் காணலாம்.
சிட்ரோன் பசால்ட் விஷனில் முன்பக்கத்தில் குவாட் எல்இடி டிஆர்எல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுவே, கர்வ் கான்செப்ட்டில் 3-பீஸ் எல்இடி டிஆர்எல் விளக்குகள் ஒன்றோடு ஒன்று இணைத்தவாறு கொடுக்கப்படுகிறது. இந்த இரு கார் கான்செப்ட்களிலும் மேற்கூரை ஆனது பின்பக்கத்தில் கொஞ்சம் சறுகலாக கொடுக்கப்படுகிறது. கர்வ் கான்செப்ட் உடன் ஒப்பிடுகையில், பசால்ட் கான்செப்ட்டில் ஷோல்டர் லைன் கொஞ்சம் தாழ்வாக உள்ளது.
டாடா கர்வ் கான்செப்ட்டில் பறித்து இழுக்கக்கூடிய டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், பசால்ட் கான்செப்ட்டில் புல்-அப் டைப் டோர் ஹேண்டில்கள் உள்ளன. கர்வ் கான்செப்ட்டில் கண்ணை கவரக்கூடிய டிசைன் மற்றும் நிறத்திலான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், பசால்ட் விஷன் கான்செப்ட்டில் கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கர்வ் கான்செப்ட்டில் ரூஃப்-ஐ தாங்கி நிற்கும் அனைத்து பில்லர்களும் காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், புதிய பசால்ட் விஷன் கான்செப்ட்டில் ஏ பில்லர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பசால்ட் கான்செப்ட்டில் ரூஃப் அந்தரத்தில் மிதப்பது போன்ற காட்சியை தருகிறது. பின்பக்கத்தில், கர்வ் கான்செப்ட் கனெக்டட் எல்இடி டெயில்லைட்களை கொண்டுள்ளது. அதுவே, பசால்ட்டில் வ்ராப்-அரவுண்ட் டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் கான்செப்ட் கார்களின் உட்பக்க கேபின் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இந்த இரு கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் கார்களில் சன்ரூஃப்-ஐ எதிர்பார்க்கலாம். பசால்ட் விஷன் கான்செப்ட்டின் மூலம் உருவாக்கப்படும் எஸ்யூவி காரில் சி3 ஏர்கிராஸில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் கர்வ் கான்செப்ட் மார்க்கெட்டில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதாவது, இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாடா நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட கார்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களாக உள்ளன. ஆனால், இந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை சிட்ரோனின் பசால்ட் விஷன் கான்செப்ட் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில், சிட்ரோனிடம் அந்த அளவிற்கு பெரிய சேல்ஸ் நெட்வொர்க் இப்போதைக்கு இல்லை.


Click it and Unblock the Notifications








