மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் இரு கார்கள்... டாடா காரின் மார்க்கெட்டை காலி பண்ண கம்மியான விலையில் கார்!!
சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விலையை தவிர்த்து, பசால்ட் காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. விலை குறைவான சிட்ரோன் காராக கொண்டுவரப்படும் இது, விற்பனையில் டாடா கர்வ் காருக்கு போட்டியாக விளங்கவுள்ளது. டாடா கர்வ் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியீடு செய்யப்பட உள்ளது. இவை இரண்டுமே கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த இரு கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டது. மேற்கூரையின் பின்பகுதி சற்று சாய்வாக அமைந்தவாறான எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். ஆனால் உண்மையில், தற்போதைக்கு அவ்வாறான கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்கள் எதுவும் இந்தியாவில் விற்பனையில் இல்லை. டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் முதல் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டுவருகிறது. அதுதான், கர்வ் ஆகும்.

கடந்த ஜூலை மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட டாடா கர்வ் இந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் டாடா கர்வ் கொண்டுவரப்படுகிறது. கர்வ் காருக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனம் பசால்ட் மாடலை களமிறக்குகிறது. டாடா கர்வ் காரை போன்று கூபே ஸ்டைலில் தோற்றத்தை கொண்ட காராக பசால்ட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சிட்ரோன் பசால்ட்டை விட டாடா கர்வ் ஆனது சற்று விலைமிக்கது ஆகும். ஆதலால், விலை குறைவான கர்வ் காருடன், சிட்ரோன் பசால்ட்டை ஒப்பீடு செய்யலாம். விலை குறைவான டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கிடைக்கும். நெக்ஸானில் வழங்கப்படும் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் வாங்க முடியும்.

சிட்ரோன் பசால்ட் காரையும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் வழங்கப்பட்டு வரும் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி மற்றும் 210 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் அதேநேரம், விலை குறைவான பசால்ட் காரை நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் பெறலாம். டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் பசால்ட் காரில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸை பெறலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், கர்வ் காரை டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், சிட்ரோன் பசால்ட்டில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில் டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட் கார்கள் இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பசால்ட்டை காட்டிலும் கர்வ் சற்று பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. அதேபோல், கர்வ் காரில் 18 இன்ச்சில் அளவில் பெரியதான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே, சிட்ரோன் பசால்ட்டை காட்டிலும் கர்வ் அளவில் பெரிய மற்றும் அகலமானதாக காட்சியளிக்கிறது. மறுப்பக்கம், புதிய பசால்ட் கார் ஆனது சிட்ரோன் கார்களுக்கே உண்டான முகப்பு பகுதி உடன் கூர்மையான லைன்களை கொண்டுள்ளது. மேலும், டாடா கர்வ் காரில் பறித்து இழுக்கக்கூடிய ஃப்ளஷ் டோர் ஹேண்டில்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பசால்ட்டில் புல்-டைப் கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களாக டாடா கர்வ் காரில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சிட்ரோன் பசால்ட் காரிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பசால்ட் மற்றும் கர்வ் இவை இரண்டும் அவற்றை உருவாக்கியுள்ள நிறுவனங்களின் முக்கிய தயாரிப்புகளாக விற்பனைக்குவர உள்ளன. இவை இரண்டின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவைதான் இந்த கார்களின் விற்பனையை தீர்மானிக்கவுள்ள முக்கியமான காரணிகள் ஆகும். இவை இரண்டில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








