ரூ.10 லட்சத்திற்கு கார் என்றால் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.. இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா போதும்
சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்று. டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனைக்குவர உள்ள கர்வ் எஸ்யூவி காருக்கு போட்டியாக சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பசால்ட் காரை பற்றிய விபரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், சிட்ரோன் பசால்ட் காரின் அறிமுக தேதி குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி புதிய சிட்ரோன் பசால்ட் கார் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதை பற்றியும், இந்த காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான சிட்ரோன் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் அதன் சி5 ஏர்கிராஸ் மூலமாக இந்திய கார்கள் மார்க்கெட்டில் நுழைந்தது. அதன்பின், கடந்த 2 வருடங்களில் மேலும் சில கார்கள் சிட்ரோனில் இருந்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் அறிமுகம் செய்த சி5 ஏர்கிராஸை தவிர்த்து, அதன்பின் சிட்ரோன் அறிமுகம் செய்த கார்கள் அனைத்தும் விலை குறைவானவை ஆகும்.

அதாவது, இந்திய மக்களுக்கு ஏற்ற விலையில் காரை வழங்குவதில் சிட்ரோன் முனைப்பு காட்டி வருகிறது. புதியதாக விற்பனைக்குவரும் பசால்ட் காரும் மிடில்-கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், டாடா கர்வ் காரை காட்டிலும் சிட்ரோன் பசால்ட்டின் விலை குறைவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பசால்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் சிட்ரோன் பசால்ட் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கர்வ் காரை ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இவ்வாறு ஒன்றிற்கு ஒன்று போட்டியாக விளங்கவுள்ள இரு கார்கள் ஒரே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பது அஜித்- விஜய் படங்களின் ரிலீஸ் போல் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் நிமிர்ந்த உடலமைப்பை கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவதற்கே சமீப வருடங்களாக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இன்னும் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் எதுவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. கூபே-ஸ்டைலை கொண்ட முதல் எஸ்யூவி காராக டாடா கர்வ் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இதே ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காரான சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.
கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்களில் மேற்கூரையின் பின்பகுதி சற்று சரிவாக இருக்கும். இதனால், மற்ற எஸ்யூவி கார்களில் இருந்து இத்தகைய எஸ்யூவி கார்கள் தோற்றத்தில் வித்தியாசப்படுகின்றன. மேலும், வரும் மாதங்களில் கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்களை வாங்கும் டிரெண்ட் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புதிய பசால்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இது சிட்ரோனின் 4வது கார் ஆகும்.

மற்ற 3 சிட்ரோன் கார்களில் இல்லாத அளவிற்கு நிறைய தொழிற்நுட்ப வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் சிட்ரோன் பசால்ட் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஒன்றான, 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 82 எச்பி மற்றும் 115 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், மற்றொரு என்ஜின் ஆப்ஷனான டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் 110 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் பெறலாம்.
நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பூடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். அதுவே டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கும். டர்போ என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 190 என்.எம் வரையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 205 என்.எம் வரையிலும் டார்க் திறனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்றப்படி, டீசல் என்ஜின் உடன் சிட்ரோன் பசால்ட் விற்பனை செய்யப்பட போவதில்லை. இது இந்த காருக்கு சற்று பின்னடைவாக இருக்கும். சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப விலையை ரூ.10 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம். இதனை அறிய இன்னும் சில வாரங்கள் காத்திருந்தாலே போதும்.


Click it and Unblock the Notifications









