விலை ரொம்ப அதிகம் கிடையாது!! ஃபேமலியா போறதுக்கு 7-சீட்டர் ஆப்ஷனிலும்... பிரெஞ்சு-ஸ்டைல் கார்!
சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் புதியதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மற்றும் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் கடந்த 2023 ஆகஷ்ட் மாதத்தில் சி3 ஏர்கிராஸ் காரை புதியதாக அறிமுகப்படுத்தியது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிட்ரோன் எஸ்யூவி கார் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த நிலையில், அறிவித்தப்படி இன்று (ஜன.29) சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் மற்றும் மேக்ஸ் என இரு விதமான வேரியண்ட்களிலும், 5 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனிகளிலும் புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் கார் கிடைக்கும். பிளஸ் வேரியண்ட்டை 5 இருக்கைகள் உடன் மட்டுமே வாங்க முடியும். அதுவே, மேக்ஸ் வேரியண்ட்டை 5 அல்லது 7 இருக்கை ஆப்ஷனில் வாங்கலாம்.
புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12,84,800 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 5 இருக்கைகள் உடன் ரூ.13,49,800 ஆகவும், 7 இருக்கைகள் உடன் ரூ.13,84,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது, மேனுவல் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸ் எவ்வாறு கிடைத்து வந்ததோ அதே தோற்றத்தில்தான் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கார் என்பதை குறிக்கும் வகையில், 'ஆட்டோமேட்டிக்' லோகோ கூட காரை சுற்றி வழங்கப்படவில்லை. சி3 ஏர்கிராஸ் காரை புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அதுகுறித்த விரிவான ரிவியூவை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் காணலாம்.
புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. கார் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை வடிவமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த ஜப்பானை சேர்ந்த ஐசின் நிறுவனம் இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வடிவமைத்துள்ளது. இந்த புதிய கியர்பாக்ஸினால், காரின் டர்போ என்ஜின் 15 என்எம் வரையில் கூடுதல் டார்க் திறனை வெளிப்படுத்தும் என சிட்ரோன் தெரிவித்துள்ளது.

அதாவது, சிட்ரோன் சி3 ஏர்கிராஸின் டர்போ என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 190 என்எம் வரையிலான டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 205 என்எம் வரையிலான டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினால் என்ஜினின் டார்க் திறன் மட்டுமே அதிகரித்துள்ளதே தவிர்த்து, என்ஜின் வழங்கும் குதிரையாற்றலில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிஸ்டத்தினால் சி3 ஏர்கிராஸ் காரின் எடை 34 கிலோ வரையில் அதிகரித்துள்ளது. 5 இருக்கை ஆப்ஷனில் மட்டுமின்றி, 7 இருக்கை ஆப்ஷனிலும் இந்த சிட்ரோன் காரில் பின்பக்க பூட் ஸ்பேஸ் ஆனது விசாலமானதாக வழங்கப்படுகிறது. 7 இருக்கைகள் உடனும் இந்த காரின் பூட் ஸ்பேஸ் பகுதியை 511 லிட்டர்கள் கொள்ளளவில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் கார்களையும் நம் நாட்டில் நிறைய பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, இளம் தலைமுறையினர் இடையே ஆட்டோமேட்டிக் கார்களை வாங்கும் ஆர்வம் அதிகம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்தே, சி3 ஏர்கிராஸில் புதிய ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை சிட்ரோன் அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications









