வெறும் 5 பேர் பயணிக்கும் எலக்ட்ரிக் காருக்கு இவ்வளவு விலையா? நம்ம ஊரில் இந்த விலையில் இன்னோவாவை வாங்கிவிடலாம்!
உலகின் நிறைய நாடுகளில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் விரிவடைய துவங்கிவிட்டது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பெட்ரோல் & டீசல் கார்களுக்கு இணையாக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகுகின்றன. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான சிட்ரோன் ஐரோப்பாவில் அதன் புதிய சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக, எரிபொருள் என்ஜின், ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் என 3 விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் காராக சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் விளங்குகிறது. இந்த சிட்ரோன் காரை பற்றியும், ஐரோப்பாவில் இந்த காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகளை பற்றியும் இனி பார்க்கலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், உலகின் பல நாடுகளில் கார்களை விற்பனை செய்துவரும் கார் நிறுவனம் சிட்ரோன் ஆகும். இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் மூலமாக நுழைந்தது. அதன்பின், கடந்த 3 ஆண்டுகளில் சில கார்கள் சிட்ரோன் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான், சி3 ஏர்கிராஸ் ஆகும்.

இந்த காரை சமீபத்தில் ஐரோப்பாவில் பெட்ரோல்/ டீசல், ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் என 3 விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் ஆரம்ப விலை ஆனது 19,400 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.17.36 லட்சம் ஆகும்.
இந்தியாவிலும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில், ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸின் விலை 25,500 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.22.83 லட்சம் ஆகும்.

இந்தியாவில் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸ் கார் விற்பனைக்கு கிடைப்பதில்லை. எலக்ட்ரிக் வெர்சனில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸின் ஆரம்ப விலை ஐரோப்பிய மார்க்கெட்டில் 27,400 யூரோக்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.24.53 லட்சம் ஆகும். ஐரோப்பாவில், பெட்ரோல் சி3 ஏர்கிராஸ் காரில் ப்யூர்டெக் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 101 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சி3 ஏர்கிராஸ் ஹைப்ரீட் காரிலும் இதே டர்போ பெட்ரோல் என்ஜின் தான் கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக கூடுதலாக 28 பிஎச்பி இயக்க ஆற்றல் கிடைக்கும். இந்த எலக்ட்ரிக் மோட்டாரை செயல்பட வைக்க 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி கொடுக்கப்படுகிறது.

இந்த என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப் உடன் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஐரோப்பாவில், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் காரில் 44kWh லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 111 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 300கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 145kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் காரை அதிகப்பட்சமாக 100 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் நிரப்பலாம். 100 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் பேட்டரியை வெறும் 26 நிமிடங்களில் 20%-இல் இருந்து 80% வரையில் சார்ஜ் நிரப்பிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இ-சி3 என்கிற எலக்ட்ரிக் காரை சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆனால், இ-சி3 காருக்கும், ஐரோப்பாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் காருக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. தோற்றத்தில் பெரியதாக வித்தியாசம் இல்லையென்றாலும், இ-சி3 காரில் சிறிய அளவில் 29.2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications









