சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
இந்தியாவில் விற்பனையாகி வரும் சிட்ரோன் மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்களின் கார்கள் வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் விலை அதிகரிக்கும் என அதன் தாய் நிறுவனமான ஸ்டெல்லென்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த கார்களின் விலை ரூபாய் 17,000 வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஸ்டெல்லன்டீஸ் நிறுவனம் இந்தியாவில் சிட்ரோன் மற்றும் ஜீப் ஆகிய தங்கள் பிராண்டுகளை களம் இறக்கி அதன் தயாரிப்புகளை மக்களுக்காக விற்பனை செய்து வருகிறது. ஜீப் மற்றும் சிட்ரோன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற நிறுவனமாக மாறி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் சிறப்பாக இருப்பதால் மக்கள் பலரின் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை நம்பி வாங்கி வருகிறார்கள்.

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஜீப் மற்றும் சிட்ரோன் பிராண்டுகளின் கார்களின் விலையை வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கார்களில் விலை0.5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அப்படி பார்த்தால் இந்த பிராண்டுகளில் விற்பனையாகும் கார்களின் விலை ரூபாய் 4000 முதல் ரூபாய் 17,000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் குறித்து ஸ்டெல்லென்டீஸ் நிறுவனம் விளக்கத்தின் படி இந்த பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் கார்களை உருவாக்குவதில் செலவு அதிகமாக இருப்பதாகவும், கார்களுக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் செலவை கணக்கிட்டு பார்க்கும்போது விலையுயர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதே நேரம் இந்த வாகனத்தை கட்டமைப்பதற்கான செலவுகள், இதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான செலவுகள் எல்லாம் பார்க்கும்போது விலை உயர்வு அத்தியாவசியமாகிறது என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சிட்ரோன் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவில் நான்கு கார்கள் விற்பனையாகி வருகிறது. அதன்படி இசி3, சி3, சி3 ஏர்கிராஸ், சி5 ஏர்கிராஸ் ஆகிய நான்கு கார்கள் விற்பனையாகி வருகிறது. சமீபத்தில் அந்நிறுவனம் சி3ஏர்கிராஸ் காரை தான் விற்பனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விரைவில் அந்நிறுவனம் பாசால்ட் என்ற தனது சர்வதேச பிராண்டில் உள்ள காரை இந்தியாவிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
சிட்ரோன் பாசால்ட் காரை பொருத்தவரை நிறுவனத்தின் சி கியூப் புரோகிராமில் உள்ள மூன்றாவது காராகவும், ஏற்கனவே சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், இந்த பாசால்ட் காரும் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவிற்கும் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த கார் விற்பனைக்கு வரும்போது குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் இந்த காருக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை என்பதால் கிட்டத்தட்ட அந்த கார்களில் பொருத்தப்படும் அதே இன்ஜின் தான் இந்த காரிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி பார்த்தால் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜர் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இது 108 பிஎச்பி பவரை 5500 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 205 என்எம் டார்க் திறனை 1750 முதல் 2500 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதே இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும்போது, 190 என்எம் டார்க் திறனைத்தான் வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜினுடன் இந்த கார் வரும்போது மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்டில் உள்ள கார்கள் தான் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இதனால் இந்த செக்மெண்டில் இந்த கார் நல்ல போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜீப் நிறுவனத்தை பொருத்தவரை தனது மெரிடியன் காரை அடுத்த சில மாதங்களில் ஃபேஸ்லிப்ட் செய்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய பம்பர்கள் காரின் உட்புறத்தில் சில மாற்றங்கள் இடம்பெறும் எனவும் முக்கியமாக அடாஸ் தொழில்நுட்பம் இதில் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது பெருகி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கார்களின் தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இதனால் கார்களின் விலை உயர்வது என்பது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. இருந்தாலும் இந்நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு பெரிய அளவில் இல்லை என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் விற்பனையிலும் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









