எம்.எஸ் தோனியின் பெயரில் புதிய கார் - விலையும் குறைவு... புக்கிங் கொஞ்ச நேரத்துக்கு தான் ஓபனில் இருக்கும்!!
தோனி (Dhoni), இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பல்வேறு உலக கோப்பைகளை பெற்று தந்தவர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததே. தோனி சமீபத்தில் சிட்ரோன் நிறுவனத்துடன் இணைந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோனின் இந்தியாவிற்கான பிராண்ட் தூதராக எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தங்களது நிறுவனத்துடன் இணைந்ததை கொண்டாடும் விதமாக சிட்ரோன் நிறுவனம் அதன் சி3 ஏர்கிராஸ் காரில் புதிய 'தோனி எடிசன்'-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்திய மார்க்கெட்டில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க சிட்ரோன் நிறுவனம் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கமான கார்களுக்கு பதிலாக ஏர்கிராஸ் உடலமைப்பை கொண்ட கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, சமீபத்தில் எம்.எஸ் தோனியை பிராண்ட் தூதராக நியமித்தது எல்லாம் அந்த முயற்சிகளின் வெளிப்பாடே ஆகும்.

இந்த நிலையில், எம்.எஸ் தோனியை கவரவிக்கும் விதமாக சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் தோனி எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். எந்த அளவிற்கு என்றால், வெறும் 100 சி3 ஏர்கிராஸ் தோனி எடிசன் கார்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக சிட்ரோன் அறிவித்துள்ளது.
இந்த 100 சி3 ஏர்கிராஸ் தோனி எடிசன் கார்களில் தோனியின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்பலகையும், தோனியின் அடையாளமான '7' என்கிற எண்ணும் கிடைக்கும். இதில் குறிப்பாக, '7' எண் ஸ்டிக்கர் நன்கு பெரியதாக கிடைக்கும் என்பதால், தூரத்தில் இருந்து காரை பார்த்தாலும் 7 என்கிற எண் பளிச்சென்று தெரியும்.
இவற்றுடன், இந்த ஸ்பெஷல் எடிசன் காரை வாங்குவோருக்கு ஆக்ஸஸரீகளையும் வழங்க சிட்ரோன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, மற்றவர்களிடம் இருந்து மாறுப்பட்ட தோற்றத்தில் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரை பெறலாம். இந்த ஆக்ஸஸரீகள் மூலமாக, கலர்ஃபுல்லான நிறத்தில் காருக்குள் சீட் கவர்கள், குஷின் தலையணை, சீட் பெல்ட் குஷின், ஒளியூட்டப்பட்ட சில் பிளேட்கள் மற்றும் முன்பக்க டேஷ்போர்டு கேமரா உள்ளிட்டவற்றை பெறலாம்.
இவை மட்டுமின்றி, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, காருக்கு உள்ளே க்ளோவ் பாக்ஸில் பிரத்யேகமாக எம்.எஸ் தோனியின் கையெழுத்து கிடைக்கும் எனவும் சிட்ரோன் அறிவித்துள்ளது. புதிய சி3 ஏர்கிராஸ் தோனி எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 18) துவங்கப்பட்டுள்ளன.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள சிட்ரோன் டீலர்ஷிப் மையம் அல்லது சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அணுகவும். புதிய சி3 ஏர்கிராஸ் தோனி எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறித்து சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஷிஷிர் மிஷ்ரா கருத்து தெரிவிக்கையில், "சி3 ஏர்கிராஸின் பிரத்யேக 'தோனி பதிப்பு'-ஐ வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இது குறிப்பிட்ட 100 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும். எங்களின் பிராண்ட் அம்பாசிடரான தோனியின் சிறந்து விளங்கும் தன்மை, தலைமைத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை சிட்ரோனின் சிறந்த அனுபவங்களை வழங்கும் அர்ப்பணிப்புடன் ஒன்றிப்போகிறது. இந்த அரிய, லிமிடெட் எடிசன் தோனியின் புகழ்பெற்ற அர்ப்பணிப்புகளுக்கு பெருமை சேர்ப்பதாகும்" என தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், எம்.எஸ் தோனிக்கு என்று பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. ஆதலால், வெறும் 100 சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் தோனி எடிசன் கார்கள் எல்லாம் போதாது. எனவே விருப்பப்படுவோர் உடனடியாக இந்த காரை புக் செய்யுங்கள். தோனியின் கையெழுத்துடன், அதேநேரம் உங்களுக்கென ஒரு காரும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








