123 ஆண்டுகால பயணம்... நீங்காத நினைவுகளுடன் விடைபெறும் கார் நிறுவனம் - இப்போவாவது மக்கள் கவனிப்பார்களா?
சிட்ரோன் (Citroen), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பழமை வாய்ந்த கார் உற்பத்தி நிறுவனம். 120 வருடங்களுக்கும் மேலாக கார் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில்தான் சிட்ரோன் அதன் முதல் காரை அறிமுகம் செய்தது. சில நாடுகளில் நூறாண்டுகளாக கார் விற்பனையில் சிட்ரோன் ஈடுப்பட்டு வருகிறது. அவ்வாறான ஒரு நாடு தான் ஆஸ்திரேலியா ஆகும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கார்கள் விற்பனையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக சிட்ரோன் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகில் மிகவும் ஸ்டைலிஷான கார்களை உருவாக்கக்கூடிய கார் நிறுவனங்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் சிட்ரோனும் நிச்சயம் ஒன்றாக இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு ஒரே காரில் பல்வேறு வண்ணங்களை வழங்குவதில் கைதேர்ந்ததாக சிட்ரோன் விளங்குகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், சி3 கார்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

இவ்வாறான கார்களை உருவாக்குவதன் மூலம் ஆஸ்திரேலியாவில் சுமார் 123 வருடங்களாக கார்கள் விற்பனையில் சிட்ரோன் ஈடுப்பட்டு வருகிறது என்றால், நம்ப முடிகிறதா? இருப்பினும், எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ஒன்று இருப்பதை போல முடிவும் ஒன்று இருந்துதானே ஆக வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நடையை கட்ட உள்ளதாக சிட்ரோன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வருகிற 2024 நவம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் கார்களின் விற்பனை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக சிட்ரோன் அறிவித்துள்ளது. இதன் மூலமாக, ஆஸ்திரேலியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் 123 ஆண்டுகால பயணம் முடிவுக்குவர உள்ளது. சிட்ரோன் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம், ஆஸ்திரேலியாவில் சிட்ரோன் கார்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதாகும். கடந்த 5 வருடங்களாக, வருடத்திற்கு சராசரியாக வெறும் 200 கார்களை மட்டுமே சிட்ரோன் விற்பனை செய்துள்ளது.

அதாவது, மொத்தமாக கடந்த 5 வருடங்களில் ஆயிரம் சிட்ரோன் கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டில் 3,803 கார்களை ஆஸ்திரேலியாவில் சிட்ரோன் விற்பனை செய்து இருந்தது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டில் வெறும் 175 கார்களை மட்டுமே சிட்ரோன் நிறுவனத்தால் விற்க முடிந்துள்ளது. இந்த 2024ஆம் ஆண்டில் 175 கார்களை கூட சிட்ரோன் நிறுவனத்தால் விற்க முடியாத சூழல் ஆஸ்திரேலியாவில் நிலவுகிறது.
ஏனெனில், நடப்பு 2024ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூன் வரையில் இந்த 6 மாத காலத்தில் வெறும் 87 கார்களை மட்டுமே சிட்ரோன் அந்த நாட்டில் விற்பனை செய்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு மாதத்தில் 14 அல்லது 15 கார்களை மட்டுமே விற்றுள்ளது. நம் இந்திய நாட்டில், மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற லக்சரி கார் நிறுவனங்கள் கூட இதை காட்டிலும் அதிக கார்களை விற்பனை செய்கின்றன.

ஆஸ்திரேலியாவிலும் ஃபெராரி, லோட்டஸ், பெண்ட்லீ, அஸ்டன் மார்டீன் போன்ற கோடி ரூபாய்களில் விலை கொண்ட கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூட சிட்ரோனை விட அதிக கார்களை விற்பனை செய்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் மாதத்திற்கு 1 அல்லது 2 கார்களை மட்டுமே விற்பனை செய்யும் மஸாராட்டி ஆஸ்திரேலியாவில் 2024 ஜனவரி - ஜூனில் மொத்தம் 200 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்ரோன் கார்கள் அதிகளவில் விற்பனையாகாததற்கு காரணம், அங்கு விற்பனை செய்யப்படும் கார்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதாகும். ஆஸ்திரேலியாவில் சி3, சி4 கிராஸ்ஓவர், சி5 ஏர்கிராஸ் மற்றும் சி5 எக்ஸ் ஃபாஸ்ட்பேக் கிராஸ்ஓவர் என 4 விதமான கார்களை சிட்ரோன் விற்பனை செய்கிறது. ஆனால், இவை நான்கும் மாடர்ன் தரத்தில் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களை கடந்த சில வருடங்களாக அப்டேட் செய்யாததில் இருந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறுவதை கடந்த சில வருடங்களாகவே சிட்ரோன் யோசித்து வந்துள்ளதை அறிய முடிகிறது. நவம்பர் மாதத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருந்தாலும், அதற்குள் கஸ்டமர்களுக்கான சர்வீஸ்களை தொடர்ந்து வழங்க சிட்ரோன் ஏற்பாடு செய்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









