மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு இது போட்டியா!.. ஒரு நியாயம் வேண்டாமா.. இவ்ளோ துணிச்சல் ஆகாதுங்க!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை சமீபத்தில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இ விட்டாரா (e Vitara), இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். வெகு விரைவிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவில் இ விட்டாரா வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே மாருதி சுஸுகியின் இந்த எலெக்ட்ரிக் காரு க்கு போட்டியாக வேறொரு நிறுவனமும் தங்களின் மின்சார காரை அதே 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto)-வே அதுவாகும்.

இந்த நிறுவனமும் அதன் முதல் மின்சார கார் மடாலாக எஸ்யூவி (SUV) ரக வாகனத்தையே களமிறக்க இருக்கின்றது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் மாருதி-யும் இந்த பிரிவை மையப்படுத்தி உருவாக்கிய இ விட்டாராவை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
ஆமாங்க, இ விட்டாரா ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஸ்கோடா நிறுவனம் என்யாக் இவி (Enyaq EV)-யையே இந்தியாவில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. முன்னதாக வெளியாகிய தகவல்கள் அனைத்தும் இந்த ஆண்டிலேயே என்யாக் இவி விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவித்திருந்தன.
நடப்பாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி ஷோ-வில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டபோதும் இவ்வாறே கூறப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களினால் என்யாக் இவி-யின் அறிமுகம் 2025 ஆம் ஆண்டிற்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. மிக மிக அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே என்யாக் இவி ஆகும்.
இந்த காரை, மின்சார கார்களின் உற்பத்திக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எம்இபி (MEB) பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஸ்கோடா நிறுவனம் தயார் செய்து வருகின்றது. இரண்டு அல்லது அதற்கும் குறைவான வேரியண்டுகளிலேயே இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. மிக முக்கியமாக என்யாக் 80 எனும் வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரை மட்டுமே தாங்கிய ஓர் வேரியண்டே இதுவாகும். 282 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதே இந்த வேரியண்ட் ஆகும். மேலும், இதனால் வெறும் 6.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
திறன் வெளிப்பாட்டில் மட்டுமல்ல ரேஞ்சை வழங்குவதிலும் மிக சிறந்த கார் மாடலாக இது இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 500 கிமீ ரேஞ்சை இது வழங்குமாம். இதற்காக 82 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதை 10 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 28 நிமிடங்களே போதுமானது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா என்யாக் இவி என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும், இந்த கார் மிக அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவே விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்த காரின் விலை சற்றே காஸ்ட்லியானதாக இருக்கும் என உறுதியாக நம்ப முடிகின்றது.


Click it and Unblock the Notifications








