எம்.எஸ் தோனி புதுசா வாங்கிய அணி இதுதான்!! எத்தனை கோடி கை மாறியதோ... ஐபிஎல்-க்கு பின் செம்ம வருவாய்!
சிட்ரோன் இந்தியா (Citroen India) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ் தோனியை பற்றி நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், சிட்ரோன் நிறுவனத்தை பற்றி தெரியுமா? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியில் விளையாடி விட்டு மீண்டும் தனது அன்றாட பணிகளில் இறங்கிவிட்டார் எம்.எஸ் தோனி. அதாவது, பிடித்தமான மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது, விவசாயத்தை கவனிப்பது என அடுத்த ஐபிஎல் தொடங்கும் வரை தோனியின் எளிமையான வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கும். இதற்காகவே, விவசாய நிலத்தில் பயிரிட்டுவரும் தோனியிடம் ஏகப்பட்ட பைக் & கார் கலெக்ஷன்ஸ் உள்ளதை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பலமுறை பார்த்துள்ளோம்.

இதற்கிடையில், எம்.எஸ் தோனி சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிட்ரோன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அது, கொஞ்ச நேரத்தில் இணையத்தில் வைரலாகியது. அந்த பதிவில், "அடுத்த கட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. எது முக்கியமோ அதை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. நான் எனது சொந்த அணியை உருவாக்க போகிறேன்" என தோனி குறிப்பிட்டு இருந்தார்.
தோனிக்கு ஏற்கனவே 42 வயதாகிவிட்டது. சில பல காயங்களால் அவதிப்பட்டுவரும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கூட கடைசி 1, 2 ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ததை பார்த்திருந்தோம். இதனால், அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவது கொஞ்சம் சந்தேகம் தான் என்கிற பேச்சு ஏற்கனவே எழ ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழல்நிலையில், தோனியிடம் இருந்து இப்படியொரு பதிவு வந்ததை பார்த்ததும் ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.

இதன்பின் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதால், வேறொரு ஐபிஎல் அணியை வாங்க தோனி திட்டமிட்டு வருகிறாரா? அல்லது ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக மாற போகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தன. அதாவது, ஃபேஸ்புக் பதிவில் எம்.எஸ் தோனி சிட்ரோன் நிறுவனத்தை டேக் செய்துள்ளதையே நிறைய பேர் கவனிக்க மறந்துவிட்டனர்.
இந்த நிலையில், இந்த எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக சிட்ரோன் இந்தியா நிறுவனம் எம்.எஸ் தோனியை தங்களது பிராண்ட் தூதராக நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிட்ரோன் ஆனது உலகளவில் பிரபலமான மற்றும் பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்றாகும். பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் பிரபலமான பி.எஸ்.ஏ குழுமத்தில் ஒரு அங்கமாக வகிக்கிறது.

இந்திய கார்கள் மார்க்கெட்டில் இந்த பிரெஞ்சு கார் நிறுவனம் 2021ஆம் ஆண்டின் மத்தியில் நுழைந்தது. இந்தியாவில் சிட்ரோனில் இருந்து வெளிவந்த முதல் கார் சி5 ஏர்கிராஸ் என்கிற எஸ்யூவி கார் ஆகும். இந்த காரின் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், அதன்பின் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிட்ரோன் சி3 காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக உள்ளது.
சிட்ரோன் கார்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. சிட்ரோன் நிறுவனத்திற்கு என இந்தியாவில் தனியாக தொழிற்சாலை கிடையாது. நம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் தொழிற்சாலையை சிட்ரோன் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இத்தகைய நிறுவனத்தின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால், இனிவரும் சிட்ரோன் கார் விளம்பரங்களில் எம்.எஸ் தோனி இருப்பார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோனியை போல, பெரியதாக ஆடம்பரத்தை விரும்பாத கார் நிறுவனம் சிட்ரோன் ஆகும். இதனால்தான், இந்த கூட்டணி சுமூகமாக முடிந்துள்ளது. தோனியிடம் உள்ள பணிவு சிட்ரோன் நிறுவனத்தின் ஐடியாலஜி உடன் ஒத்துப் போவதாக சிட்ரோன் பிராண்ட் இயக்குனர் ஷிஷிர் மிஷ்ரா கூறியிருப்பதை மறந்துவிட வேண்டாம். ஆதலால், இந்த கூட்டணி பயணம் நீண்ட வருடங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









