டீசல் கார்களை அடியோட ஒழிச்சு கட்ட போறாங்க... இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல...
இந்தியாவில் சொகுசு கார்களை (Luxury Cars) வாங்குவதற்கு என தனியாக மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டமே உள்ளது. பெரும் பணக்காரர்கள் பலரின் முதல் சாய்ஸ் சொகுசு கார்கள்தான். இந்த சொகுசு கார் செக்மெண்ட்டில் முன்பெல்லாம் டீசல் இன்ஜின் (Diesel Engine) பொருத்தப்பட்ட மாடல்களின் ஆதிக்கம்தான் மிகவும் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்திய சந்தையில் தற்போது டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட சொகுசு கார்களின் விற்பனை கிடுகிடுவென குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, சொகுசு கார் செக்மெண்ட்டில், டீசல் இன்ஜின் மாடல்களின் பங்களிப்பு சுமார் 80 சதவீதமாக இருந்தது. அதாவது 100 சொகுசு கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 80 கார்கள், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டவையாக இருந்தன.
ஆனால் கடந்த 2023ம் ஆண்டில் இது வெறும் 35 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு 100 சொகுசு கார்களிலும், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் எண்ணிக்கை வெறும் 35 மட்டுமே. டீசல் இன்ஜின் கார்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது.

வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை பொருத்தி கொள்வது எளிமையாக மாறியிருப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் பிஎம்டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்தின் 'மார்க்கெட் ஷேர்' (Market Share) 50 சதவீதமாக இருந்தது.
இதன் மூலம் இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த பிஎம்டபிள்யூ கார்களில், எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு சுமார் 25 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, 65 சதவீதமாக இருந்த டீசல் கார்களின் விற்பனை, கடந்த 2023ம் ஆண்டு வெறும் 36 சதவீதமாக குறைந்துள்ளது. மறுபக்கம் ஆடி இந்தியா (Audi India) நிறுவனமோ, இங்கு டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதையே நிறுத்தி விட்டது.
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் டீசல் இன்ஜின் கார்களின் விற்பனையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா வேக வேகமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருவதையே இது உணர்த்துகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் டீசல் கார்களில் இருந்து இந்தியா எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். எலெக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பதால்தான் இதை கூறுகிறோம்.


Click it and Unblock the Notifications








