மக்கள் உஷார் ஆயிட்டாங்களா? எலக்ட்ரிக் கார்கள் சேல்ஸ் என்ன இப்படி ஆயிடுச்சு... காரணம் என்னவா இருக்கும்?
இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களை உலகளவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோர் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. புதிய கார் வாங்குபவர்கள் இடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் பொதுவாகவே வருட இறுதி மாதங்களில் தான் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகுவது வழக்கம். எலக்ட்ரிக் கார்களுக்கும் வருட இறுதி பண்டிகை நாட்களில் தான் அதிக கஸ்டமர்கள் கிடைப்பர். ஆனால், நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் மற்றும் எம்பிவி கார்கள் என அனைத்து விதமான எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 6,335 ஆகும். அதுவே, கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் 7,012 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது 10% குறைந்துள்ளது. இதுவாவது பரவாயில்லை, கடந்த 2024 ஜூலையில் 7,898 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
அதனுடன் ஒப்பிடுகையில், எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 19% குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மொத்தம் 62,931 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 18% அதிகமாகும். இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை வழக்கத்தை காட்டிலும் குறைந்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள கார் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா ஆகும். இதில் சில நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 4,085 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் 2023 ஆகஸ்ட்டில் விற்பனை செய்த 4,777 டாடா எலக்ட்ரிக் கார்கள் உடன் ஒப்பிடுகையில் இது 14% குறைவாகும். ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அதிகம் விற்பனை செய்வதில் 2வது இடத்தில் உள்ள எம்ஜி மோட்டாரின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 21% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறைவிற்கு பல காரணங்கள் உள்ளன. நம் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் பயம் இன்னமும் உள்ளது. அதாவது, பெட்ரோல், டீசலை நாட்டின் எந்தவொரு மூலை முடுக்கிலும் பெற முடிகிறது. ஆனால், அந்த அளவிற்கு சார்ஜிங் வசதிகளை தற்சமயம் பெற முடிவதில்லை. இதனால், எலக்ட்ரிக் கார்களில் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. அதாவது அந்த அளவிற்கு, நீண்ட நேரத்திற்கு/ தொலைவிற்கு இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய கார் நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இருப்பினும், அதற்கேற்ப எலக்ட்ரிக் கார்களின் விலைகள் அதிகமாக இருப்பதால், பெரிய முதலீட்டில் எலக்ட்ரிக் கார்களை வாங்க நிறைய பேர் தயங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களினால் பசுமையான போக்குவரத்தை பெற முடியும் என்கிற முயற்சியில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறைந்துள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில் இது தற்காலிகமானவையாகவே இருக்கும். ஆதலால், வரும் மாதங்களில் இருந்து எலக்ட்ரிக் கார்கள் விற்பனை மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









