இந்த விஷயத்தில் எல்லாரும் டாடா காரை தான் சூஸ் பண்றாங்க!! மஹிந்திரா, ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு!
இந்தியாவில் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களையும், கடந்த நிதியாண்டில் அவை எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளன என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2023-24ஆம் நிதியாண்டு இந்த ஏப்ரல் 1ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த 1 வருடத்தில் கிடைத்த வருவாய்கள் மற்றும் அதன் மூலம் பெற்ற இலாப, நஷ்டங்களை ஒவ்வொரு கார்ப்பிரேட் நிறுவனங்களும் கணக்கிட்டு, வெளியுலகிற்கு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த கார் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி பார்க்கும்போது, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் நாம் அனைவரும் எதிர்பார்த்ததை போல் டாடா மோட்டார்ஸ் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 64,217 எலக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, இதற்கு முந்தைய 2022-23ஆம் நிதியாண்டில் 38,728 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.
இந்த வகையில் பார்த்தால், டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது கடந்த ஒரு வருடத்தில் சுமார் 25,489 யூனிட்கள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் காரை வாங்கும் 4இல் 3 பேர் டாடா எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வதாக இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. டாடா பிராண்டில் இருந்து தற்சமயம் டியாகோ இவி, டிகோர் இவி, பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி என மொத்தம் 4 விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்த விலையில் தற்சமயம் வேறெந்த நிறுவனமும் இத்தனை எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது இல்லை. இதன் காரணமாக, எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து, 2வது இடத்தில் மிக பெரிய இடைவெளி உடன் எம்ஜி மோட்டார் உள்ளது. ஏனெனில், கடந்த நிதியாண்டில் எம்ஜி மோட்டாரில் இருந்து 11,611 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், 2022-23ஆம் நிதியாண்டில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது 7,061 அதிகமாகும். ஏனெனில், அந்த வருடம் முழுவதுமாகவே மொத்தம் 4,550 எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எம்ஜி பிராண்டில் இருந்து கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி என இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கடுத்து 3வது இடத்தில் மஹிந்திரா உள்ளது. மஹிந்திரா பிராண்டில் இருந்து கடந்த நிதியாண்டில் மொத்தம் 6,071 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022-23ஆம் நிதியாண்டில் மொத்தமாகவே வெறும் 485 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் மஹிந்திராவில் இருந்து எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் விற்பனையில் இல்லை.
4வது மற்றும் 5வது இடங்களை சிட்ரோன் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் பிடித்துள்ளன. இ-சி3 எலக்ட்ரிக் காரின் மூலமாக எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சிட்ரோன் நல்ல இடத்தை பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 1 வருடத்தில் மொத்தம் 2,032 எலக்ட்ரிக் கார்களை சிட்ரோன் விற்பனை செய்துள்ளது. கோனா, ஐயோனிக் 5 என இரு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாய் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,829 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. இதனால், எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் மேலும், மேலும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே போக போகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications









