டாடாவில் எலக்ட்ரிக் காரை வாங்க தயங்குகிறார்களா மக்கள்? சேல்ஸ் நம்பர் என்ன சொல்லுது!!
இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்து உள்ளன. அவற்றை பற்றி விரிவாகவும், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 7,415 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெறும் 6,039 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது 22.79% அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 9,503 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, இந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் 21.97%, அதாவது 1,088 எலக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஒரே மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை இந்த அளவிற்கு குறைந்திருப்பதற்கு காரணம், டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைந்திருப்பதாகும். ஏனெனில், இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆகும். இந்தியாவில் விற்பனையாகும் 4இல் 3 எலக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்துடையது ஆகும்.

ஆனால், வழக்கத்தை காட்டிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது வெகுவாக குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2024 மார்ச்சில் 7,005 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இதற்கடுத்த கடந்த ஏப்ரல் மாதத்தில் 4,956 டாடா எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் சுமார் 2 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை குறைவாக டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இதனை காட்டிலும் குறைவாக வெறும் 4,504 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த லிஸ்ட்டில் டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது. எம்ஜி நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 1,203 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரலில் வெறும் 350 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் எம்ஜி விற்பனை செய்திருந்தது.

அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் எம்ஜி எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2024 மார்ச் மாதத்திலும் 1,131 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் விற்பனை செய்திருந்தது. எம்ஜி எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்த அளவிற்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம், எம்ஜி நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட கோமெட் இவி எலக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த வரிசையில் 3வது இடத்தில் மஹிந்திரா 629 எலக்ட்ரிக் கார்களின் விற்பனை உடன் உள்ளது. மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விற்பனையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. பிஒய்டி, பிசிஏ ஆட்டோமொபைல்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் முறையே 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 138, 128 மற்றும் 128 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களும் கடந்த மாதத்தில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. ஆனால், இவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் 100ஐ கூட தாண்டவில்லை. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் எம்ஜி மெதுவாக வளர்ந்து வருகிறது. இதனால்தான், டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications









