இந்த விஷயத்தில் மக்கள் டாடா மோட்டார்ஸை தான் தேடி ஓடிவராங்க!! மேட்-இன்-இந்தியா கார்களுக்கு முக்கியத்துவம்!
இந்தியாவின் மக்கள் தொகை உடன் ஒப்பிட்டால், நம் நாட்டில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். எலக்ட்ரிக் 2-வீலர்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகும் நிலையில், ஒரு மாதத்தில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை இப்போதுதான் 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 2024 ஜனவரி மாதத்தில் மொத்தம் 8,164 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 944 எலக்ட்ரிக் கார்கள் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 7,220 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. அதேபோல், 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் கடந்த மாதத்தில் சுமார் 4,717 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏனெனில் கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் வெறும் 3,447 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்தியாவில் விற்கப்பட்டு இருந்தன. வழக்கம்போல், கடந்த ஜனவரியிலும் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. அதாவது, தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் கார் பிராண்டாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 5,591 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 4,875 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்ட 2023 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் இது 716 அதிகமாகும். 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது கடந்த மாதத்தில் சுமார் 3,109 அதிகரித்துள்ளது. ஏனென்றால், அந்த மாதத்தில் வெறும் 2,482 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இதனால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் நெக்ஸான் இவி, டியாகோ இவி, பஞ்ச் இவி மற்றும் டிகோர் இவி என 4 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டாடாவுக்கு அடுத்து 2வது இடத்தை எம்ஜி மோட்டார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 1,162 ஆகும்.
2023 ஜனவரியில் 959 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 2023 டிசம்பர் மாதத்தில் இன்னும் குறைவாக 435 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எம்ஜி நிறுவனத்தில் இருந்து கோமெட் மற்றும் இசட்.எஸ் என இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

3வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் 741 எலக்ட்ரிக் கார்களின் விற்பனை உடன் உள்ளது. மஹிந்திராவில் இருந்து தற்சமயம் எக்ஸ்யூவி400 என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் கடந்த 2023 ஜனவரியில் 667 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. 2023 டிசம்பரில் ஒரு எக்ஸ்யூவி400 கார் கூட விற்பனையாகவில்லை.
4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கைகளுடன் ஹூண்டாய், பிஒய்டி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 162, 150 மற்றும் 146 ஆகும். கடந்த ஜனவரி மாதத்தில் மெர்சிடிஸ் நிறுவனம் 57 எலக்ட்ரிக் கார்களையும், வால்வோ நிறுவனம் 50 எலக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, கியா, சிட்ரோன், ஆடி என இன்னும் நிறைய கார் நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கின்றன. ஆனால், இவற்றில் தற்போதைக்கு டாடா எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுபவை யாவும் குறைந்த விலையிலான எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications









