நம்ம பக்கத்து வீட்டுக்காரர்களையும் சேத்து கூட்டிட்டு போகலாம்.. 7 இருக்கைகளுடன் விற்பனைக்கு வரவுள்ள கார்கள்!
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி எஸ்யூவி கார்களுக்கே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. முன்பு ஹேட்ச்பேக் ரக கார்களே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் பிரிவாக இருந்தது. ஆனால், தற்போது டிரெண்ட் அப்படியே மாறி இருக்கின்றது. இதைப்போலவே தற்போது இந்தியர்களின் கவனம் எம்பிவி கார்களின் பக்கம் திரும்பத் தொடங்கி இருக்கின்றது.
குறிப்பாக, அதிக இட வசதி மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட கார்களின் பக்கம் திரும்பத் தொடங்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்களுக்கே அதிக முக்கியத்துவத்தை இந்தியர்கள் வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாக நாட்டில் அதிக இருக்கைகள் கொண்ட வாகனங்கள் அதிகளவில் விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன.

சில இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்காக வரிசையில் காத்துக் கொண்டும் இருக்கின்றன. அந்தவகையிலேயே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் அதிக இருக்கைகள் கொண்ட கார்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கும் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் லிஸ்ட்டையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival): இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடலாக கியா கார்னிவல் இருக்கின்றது. இந்த கார் மாடலின் அடுத்த தலைமுறை வெர்ஷனே விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஏற்கனவே இந்த கார் மாடலின் சோதனையோட்டத்தை கியா தொடங்கிவிட்டது.
எனவே அடுத்த ஒரு சில மாதங்களில் இதன் வருகை அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக அப்கிரேட் செய்யப்படும் கார் மாடல்கள் மறைக்கப்பட்ட நிலையிலேயே சாலையில் சோதனையோட்டம் செய்யப்படும். ஆனால், கியா அதன் அடுத்த தலைமுறை கார்னிவல் கார் மாடலை எந்தவொரு மறைப்பிற்கு உட்படுத்தவில்லை. எனவே புதிய கியா கார்னிவல் என்ன மாதிரியான சிறப்புகள் மற்றும் புதிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது லேசாக தெரிய வந்திருக்கின்றது.
அந்தவகையில், புதிய கியா கார்னிவலில் மாற்றப்பட்ட பம்பர், கிரில் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் அதன் லைட் செட்-அப் மிகவும் கவர்ச்சியான தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், புதிய அலாய் வீல், இரண்டு 12.3 அங்குல திரை, மூன்று வரிசை இருக்கை அமைப்பு ஆகியவற்றையும் புதிய கியா கார்னிவல் தனக்குள் கொண்டிருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar facelift): இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மூன்று வரிசைகள் இருக்கை அமைப்பையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. இதில், தாராளமாக 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். அல்கஸாரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் புதிய கிரெட்டா-வை தழுவிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த காரின் சோதனையோட்டமும் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால், கியா கார்னிவல் போல் அல்லாமல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே அது சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களை எங்களால் வெளியிடவில்லை. அதேவேளையில், புதிய அல்கஸார் கார் மாடலில் அடாஸ் போன்ற பன்முக நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
கியா இவி9 (Kia EV9): இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக கியா மாறி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. அதேவேளையில், நிறுவனத்தின் சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே கியா இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அதன் உலக புகழ்பெற்ற இவி9 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது. இந்த கார் மாடலும் உலகின் பல்வேறு விருதுகளை வென்ற கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இவி9 விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இத்தனை பேர் பயணித்தாலும் மிக தாராளமான இட வசதி இந்த காரில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் ஓர் முழு சார்ஜில் 600 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.
கியா கேரன்ஸ் இவி (Kia Carens EV): கியா நிறுவனம் இவி9 எலெக்ட்ரிக் காரை மட்டுமல்ல கேரன்ஸ் இவியையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எம்பிவி கார் மாடல்களில் ஒன்றாக கேரன்ஸ் இருக்கின்றது. இது தற்போது ஐசிஇ வெர்ஷனில் மட்டுமே நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
கேஒய்-இவி எனும் குறிபெயரிலேயே இந்த காரை கியா தற்போது குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 400 கிமீ தூரம் முதல் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் வருகை பிஒய்டி நிறுவனத்தின் இ6 எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடலுக்கு போட்டியாக அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் (Maruti Grand Vitara மற்றும் Toyota Hyryder) கார் மாடல்களின் 7 சீட்டர் வெர்ஷன்: மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாக்கப்பட்ட கார் மாடலே கிராண்ட விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவை ஆகும். இந்த இரண்டும் கார் மாடல்களும் அலங்காரத்தால் மட்டுமே மாறுபடும்.
உருவத்தில் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் தற்போது 5 இருக்கைகளுடன் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடனேயே விரைவில் 7 சீட்டர் வெர்ஷன் இணைக்கப்பட இருக்கின்றது. இதன் வருகைய மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களுக்கு டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த டிமாண்டை முன் வைத்தே நாட்டில் அதிக எண்ணிக்கையில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றது. மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி இன்னும் சில அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








