உப்பால் தயாரிக்கப்பட்ட பேட்டரியில் இயங்கும் மின்சார கார் அறிமுகம்! இதுவே உலகின் முதல் கார்!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volksawagen) ஆதரவில் இயங்கும் நிறுவனமே ஜேஏசி மோட்டார்ஸ் (JAC Motors) ஆகும். இது ஓர் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே அதன் முதல் உப்பால் தயாரிக்கப்பட்ட பேட்டரியைக் கொண்ட எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. அதாவது, சோடியம்-அயன் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் காரையே அது வெளியீடு செய்துள்ளது.
பொதுவாக மின்சார வாகனங்கள் என்றால் அதில் லித்தியம் அயன் (Lithium-ion) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இது சற்று காஸ்ட்லியானது ஆகும். பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிக விலையைக் கொண்டிருக்க அதன் விலை உயர்ந்த பேட்டரி பேக்கே காரணமாக இருக்கிறது.

எனவே, இந்த விஷயத்தில் மாற்று கொண்டு வரப்படாதா என்கிற ஏக்கம் நம்மில் பலரிடத்தில் உள்ளது. இந்த நிலையிலேயே சோடியத்தால் தயாரிக்கப்பட்ட பேட்டரி பேக் கொண்ட கார் இந்த உலகில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. சோடியம் (Na) இது ஓர் மலிவு விலை கனிமம் ஆகும்.
மேலும், இது எளிதில் கிடைக்கக் கூடிய கனிமமாகவும் காட்சியளிக்கின்றது. ஆகையால், அடுத்து வரும் நாட்களில் (எதிர் காலத்தில்) மிக மிக விலை குறைவான மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது சீன நிறுவனத்தின் சோடியம் அயன் (Sodium-ion) பேட்டரி பேக்கால் இயங்கும் காரின் வெளியீட்டு சம்பவம் அமைந்துள்ளது.

ஜேஏசி யிவெய் இவி சீஹோல் இ10எக்ஸ் (JAC Yiwei EV Sehol E10X), இதுவே சோடியம் அயன் பேட்டரி பேக்கைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் டெலிவரி பணிகள் 2024 ஜனவரியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யிவெய் இவி ஓர் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சோடியம் அயன் பேட்டரி பேக்கானது, பெய்ஜிங்கை மையமாகக் கொண்டு இயங்கும் இரு நிறுவனங்களின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டது ஆகும். எச்ஐஎன்ஏ பேட்டரி மற்றும் ஜேஏசி-யின் மற்றுமொரு நிறுவனமான யுஇ ஆகிய இரு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே அந்த உருளை வடிவ சோடியம் அயன் பேட்டரி பேக் ஆகும்.

ஜேஏசி நிறுவனத்தின் புதிய பிராண்டே யிவெய் ஆகும். 2023லேயே ஜேஏசி-யால் இது தொடங்கப்பட்டது. இதன் 50 சதவீத பங்கு ஃபோக்ஸ்வேகன் இடமும், மீதமுள்ள 50 சதவீத பங்கு ஜேஏசி இடமும் உள்ளது. மின்சார வாகன உற்பத்தி மட்டுமே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் ஜேஏசி, தாங்கள் உலகின் முதல் லித்தியம் அல்லா பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவோம் என அறிவித்தது. இந்த அறிவிப்பையே அது தற்போது நிறைவேற்றி இருக்கின்றது. சீஹோல் இ10எக்ஸ் ஹேட்ச்பேக் காரில் 25 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது 120 Wh/kg எனெர்ஜி டென்சிட்டி கொண்டது. மேலும், 3சி முதல் 4சி சார்ஜிங் திறன் கொண்டது என்றும் கூறப்படுகின்றது. இந்த அதிக வேக திறன் வாயிலாக 10 சதவீதம் முதல் 80 சதவீதம் சார்ஜ் திறனை வெறும் 20 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும்.
மேலும், முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 252 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும். இத்தகைய வசதிக் கொண்ட குட்டி எலெக்ட்ரிக் காரையே விரைவில் சீனாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது யிவெய் இவி. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் உலிங் பிங்கோ, பிஒய்டி சீகுல் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாளனாக மாறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உப்பு பரந்த அல்லது மிக தாராளமாகக் கிடைக்கும் கனிமமாக உள்ளது. ஆகையால், இதைக் கொண்ட பேட்டரி பேக்கை தயாரிக்க பெரிய அளவில் செலவு ஏற்படாது. மேலும், மலிவை விலையில் இருக்கும். ஆகையால், இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் பெட்ரோல், டீசல் கார்களைப் போல மின்சார வாகனங்களும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









