மாருதி ஜிம்னி ஓரமா போ... ஐந்து கதவுகள் கொண்ட கூர்கா அறிமுகம்.. ரூ. 25,000 இருந்தா போதும்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் இது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது. இதன் வருகையை முன்னிட்டே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த காருக்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் ஐந்து கதவுகள் கொண்ட ஃபோர்ஸ் கூர்கா காரை புக் செய்துக் கொள்ள முடியும். மே முதல் வாரத்தில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதைத் தொடர்ந்து, மே மாத இறுதிக்குள் அதன் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஜிம்னிக்கு போட்டி அளிக்கும் வகையிலேயே போர்ஸ் கூர்கா 5 டோர் வெர்ஷனின் வருகை அமைந்திருக்கின்றது. இந்த காருக்கு மட்டுமல்ல விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஐந்து கதவுகள் கொண்ட தார் காருக்கும் இது போட்டியாக அமைய இருக்கின்றது.
ஃபோர்ஸ் கூர்கா 3 டோர் வெர்ஷன் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற நிலையிலேயே தற்போது புதிதாக 5 கதவுகள் கொண்ட வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. மூன்று கதவுகளைக் கொண்டதைக் காட்டிலும் இது (5 கதவுகள் கொண்ட கூர்கா) சற்று பெரிய உருவம் கொண்டதாக இருக்கின்றது.
இதுதவிர, சற்று அதிக இட வசதியையும் ஃபோர்ஸ் கூர்கா 5 டோர் வெர்ஷன் கொண்டிருக்கும். தொடர்ந்து, 3 டோர் கூர்காவைபோலவே இதுவும் அதிக கவர்ச்சியான மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாக இருக்கின்றது. அந்தவகையில், காரின் முன் பக்க கிரில்லில், பளிச்சென்ற எழுத்துக்களில் கூர்கா எனும் பேட்ஜ், பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டுகளுடன் கூடிய வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், பனி மின் விளக்கு ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், மேற்கூரையில் லக்கேஜை ஏற்றிக் கொள்வதற்கான ரேக், கொழு கொழுவென்ற உருவம் கொண்ட வீல்கள் மற்றும் டயர், கருப்பு நிற ஹேண்டில்கள் உள்ளிட்டவை ஃபோர்ஸ் கூர்காவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பின் பக்கத்தில் ஏணி மற்றும் கூடுதல் வீல் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கும்.
இந்த அமைப்பு 5 கதவுகள் கொண்ட கூர்காவிற்கு கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மற்றபடி இந்த கார் 3 கதவுகள் கொண்ட கூர்காவுடன் ஒற்றுப் போகும் வகையிலேயே இருக்கின்றது. கூர்காவின் உட்பக்கத்தில் பயணிகளை வசீகரிக்கும் விதமாக பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதில் முக்கியமாக ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 9 அங்குல தொடுதிரை சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஷிஃப்ட்-ஆன்-ஃப்ளை 4X4 (shift-on-fly 4x4) ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை 2.6 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மோட்டார் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.
இதுதவிர, வேறு எந்த கியர் ஆப்ஷனையும் இந்த காரில் பெற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 கதவுகள் கொண்ட கூர்கா காரில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். அதேவேளையில், 3 கதவுகள் கொண்ட கூர்காவில் 4 முதல் ஐந்து பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கூர்கா போட்டியாக வந்திருக்கும் எஸ்யூவி கார் பிரிவில் தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு போட்டியாகவே கூர்காவின் 3 மற்றும் 5 கதவுகள் கொண்ட கார் விற்பனையில் களமிறங்கி இருக்கின்றது. இந்த கதவுகள் கொண்ட கூர்காவுடன் அப்டேட் செய்யப்பட்ட 3கதவுகள் கொண்ட கூர்காவும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








