மீண்டும் ஃபோர்டு இந்தியாவிற்கு வருவது உறுதியானது! முதல் கார் இது தானா? தாறுமாறா இருக்குதே!
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் தனது வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அது குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மீண்டும் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக ஆலை அமைத்து கார்களை தயார் செய்து விற்பனை செய்து வந்த நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் தனி மவுசு இருந்த நிலையில் பலர் ஃபோர்டு கார்களை விரும்பி வாங்கும் ரசிகர்களாகவே இருந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் போதிய அளவு விற்பனை இல்லை என்ற காரணத்திற்காக இந்தியாவில் இருந்து வெளியேறியது.

இது ஃபோர்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது காலடித்தடத்தை எடுத்து வைக்கும் என்ற பேச்சு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தம் ரத்தான நிலையில் இந்த பேச்சு எழுந்தது.
இதற்கு முன்னர் சென்னை மறைமலை நகரில் உள்ள தனது ஆலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கார்களையும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் அது எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் கடந்த 2021-ம் ஆண்டு அந்த ஆலை மூடப்பட்டது.

இந்நிறுவனத்திற்கு குஜராத் மாநிலத்திலும் ஒரு ஆலை இருந்தது. ஆனால் அந்த ஆலையை தற்போது டாடா நிறுவனம் வாங்கி தனது டாடா தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு வருமா வராதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்து வந்ததது.
இந்நிலையில் இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தனது கார்களுக்கு காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்திருந்தது. இதன் மூலம் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கும், சென்னை ஆலையில் தனது வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் என பேச்சு எழுந்தது.
இந்நிலையில் நமக்கு ஒரு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரிக்காமல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை நேரடியாக இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து அதை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
அதன்படி முதல் காராக அடுத்த தலைமுறை எண்டியூரோ காரை 2025-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது. இது மட்டுமல்லாமல் ஃபோர்டு மாஸ்டாக் மெக்-இ என்ற எலெக்ட்ரிக் காரையும் இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை ஆலையில் இந்த கார்களை நேரடியாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது இந்த இரண்டு கார்களுக்காகவும் காப்புரிமைக்காக ஃபோர்டு நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில் போர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் களமிறங்குவது என்பது உறுதியாகி உள்ளது.
ஃபோர்டு மஸ்டாக் காரை பொருத்தவரை சர்வதேச மார்க்கெட்டில் 72 கிலோ வாட் ஹவர் மற்றும் 91 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் உடன், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வில் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.
இது 259 எச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. பெரிய பேட்டரி கொண்ட காரில் 294 எச்பி பவர் 530 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
இதில் எந்த வேரியன்ட் இந்தியாவிற்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை இரண்டு வேரியன்டும் இந்தியாவிற்குள் வந்தாலும் வரலாம். ஃபோர்ட் மாஸ்டாக் காரை பொருத்தவரை இந்தியாவில் ஆடி க்யூ8 இ-டிரான், மெர்சிடிஸ் இக்யூஇ மற்றும் பல்வேறு கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை நிச்சயம் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் களமிறங்க உள்ளது. அதன் ரசிகர்களை குஷிப் படுத்தி உள்ளது. மீண்டும் இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் களமிறங்கி தனது ஆலையை துவக்கினால் நிச்சயம் கடும் போட்டியை ஏற்படுத்தும். ஆனால் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரை இறக்குமதி செய்து விற்பனை செய்தால் அதிக விலையில் உள்ள காரை மட்டுமே விற்பனை செய்யும்.


Click it and Unblock the Notifications








