சென்னை மீண்டும் சூடுபிடிக்க போகுது.. கம்பேக் கொடுக்க தயாராகி வரும் ஃபோர்டு.. அமெரிக்க கொடியை நாட்ட பிளான்!
பிரபல அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford), இந்தியாவில் மீண்டும் அதன் கால் தடத்தைப் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவே வேண்டாம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு இந்த நிறுவனம் வெளியேறியது. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் ஃபோர்டு நிறுவனம், 2021 ஆம் ஆண்டிலேயே சந்தையை விட்டு வெளியேறியது. தன்னுடைய அனைத்து கார் மாடல்களையும் அது விற்பனையில் இருந்து பின் வாங்கியது. மேலும், கார் உற்பத்தி போன்ற முக்கிய பணிகளையும் அது இந்தியாவில் நிறுத்தியது.
இந்த நிலையிலேயே அது மீண்டும் நாட்டில் கால் தடம் பதிக்கும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்முறை ஐசிஇ (பெட்ரோல் மற்றும் டீசல்) வாகனங்களுக்கு பதிலாக அது எலெக்ட்ரிக் வாகனங்களையே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு மிக தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்தியர்களும் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இந்த நிலை சமீப சில காலமாக சூடுபிடித்த வண்ணம் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் மின்சார வாகன பிரிவை குறி வைத்து மீண்டும் சந்தைக்கு திரும்புவதை ஃபோர்டு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், "மறு வருகையை முன்னிட்டு சந்தையில் நிலவும் சாத்தியக் கூறுகளை ஃபோர்டு நிறுவனம் ஆராய்ந்து வருவதாக" தெரிவித்துள்ளது. மேலும், "உயர்மட்டக் குழுவின் ஆலோசனையில் இது இருப்பதாகவும், விரைவில் இந்திய மறு வருகைக்கான ஒப்புதல் கிடைப்பதற்கான சூழலே நிலவுவதாகவும்" அந்த செய்தியில் அது குறிப்பிட்டிருக்கின்றது.
உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஃபோர்டு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக, இந்த நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருந்தது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக ஈகோ ஸ்போர்ட் மற்றும் ஃபிகோ உள்ளிட்டவை இருந்தன.
இதுதவிர, என்டீயோவர் போன்ற பிரமாண்ட உருவம் கொண்ட கார் மாடலையும் இந்தியாவில் ஃபோர்டு விற்பனைக்கு வழங்கியது. இருப்பினும், போதிய அப்டேட் இல்லாததாலும், புதிய மாடல்களைக் கொண்டு வராததாலும் மற்றும் சந்தையில் போட்டி அதிகரித்துக் காணப்பட்டதாலும் இந்த நிறுவனத்தால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதன் விளைவாகவே அது 2021 ஆம் ஆண்டில் சந்தையை விட்டு வெளியேறியது.
இந்த மாதிரியான சூழலிலேயே மீண்டும் இந்தியாவை, குறிப்பாக, இந்தியாவின் மின்சார வாகன பிரிவை நம்பி ஃபோர்டு களமிறங்க இருக்கின்றது. இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, உலக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்ல, மின்சார வாகன உற்பத்தியின் களஞ்சியமாக நாட்டை மாற்றுவதும் அதன் நோக்கமாக உள்ளது.
இதன் அடிப்படையில் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்திய அரசாங்கம் அறிவித்து வருகின்றது. சமீபத்தில்கூட மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முக்கிய பங்கினை வகிக்கும் அயன் தாதுவிற்கான அடிப்படை வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு மின்சார வாகனம் சார்ந்து பல்வேறு ஊக்குவிப்பு பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழையும் எனில் அதன் சென்னை ஆலையிலேயே வாகன உற்பத்தியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியநிலையில் அதன் ஆலையை வாங்க பல நிறுவனங்கள் முன் வந்தன. அந்தவகையில், நிறுவனத்தின் சென்னை ஆலையை சஜ்ஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் வாங்க முற்பட்டது.
ஆனால், அதை ஃபோர்டு விற்கவில்லை. அதேவேளையில், தன்னுடைய குஜராத் ஆலையை டாடா மோட்டார்ஸுக்கு விற்றுவிட்டது. எனவே, தன் வசம் இருக்கம் சென்னை ஆலையில் வைத்து தன்னுடைய வரும் கால கார்களை ஃபோர்டு தயாரிக்கலாம் என நம்பப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தாலும், சென்னை தொழிற்சாலையில் வாகன உற்பத்தி தொடங்க சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம் என யூகிக்கப்படுகின்றது. புதிய வாகனங்களுக்கு ஏற்ப உற்பத்தி ஆலையை புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். ஆகையால், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் நுழைந்தாலும் உடனடியாக அதன் தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








