இனி ஃபார்ச்சூனர் காரை ஒரு பய வாங்க மாட்டான்! எண்டேவர் கார்ல இவ்வளவு விஷயம் எக்ஸ்ட்ரா இருக்குதா?
போர்டு நிறுவனம் தனது எண்டேவர் காரை அப்டேட் செய்து விரைவில் வெளியிட உள்ளது. இந்த காரின் அப்டேட்கள் பற்றி பார்க்கும் போது இதன் போட்டி காரான டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை விட அதிகமான அம்சங்கள் கொண்டதாக இந்த கார் விரைவில் வரவுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
புதிய தலைமுறை போர்டு என்டேவர் கார் சமீபத்தில் இந்தியாவில் சோதனை செய்யும் போது கேமராக்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. இதன் மூலம் போர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் களமிறங்கப் போவதாக செய்திகள் எல்லாம் வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை போர்டு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. சென்னையில் உள்ள ஆலையை இதுவரை யாருக்கும் விற்காமல் போர்டு நிறுவனமே பராமரித்து வருகிறது.

இந்நிலையில் போர்டு நிறுவனம் புதிய தலைமுறை எண்டேவர் ஒரு காரை தயாரித்துள்ளது. இந்த காரை எவரெஸ்ட் என்ற பெயரில் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்தக் காரை தற்போது இந்தியாவில் சோதனை செய்து வரும் நிலையில் இந்த கார் போர்டு நிறுவனம் மூலம் எண்டேவர் என்ற பெயரிலேயே விற்பனைக்கு வரலாம் அல்லது எவரெஸ்ட் என்ற பெயரில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரலாம்.
இப்படியாக இந்த போர்டு எண்டேவர் கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இந்த கார் மார்க்கெட்டில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காருடன் கடும் போட்டியை சந்திக்கும் இந்நிலையில் ஃபார்ச்சூனர் காரைவிட இதில் சில அம்சங்கள் கூடுதலாக இருக்கிறது. அதைப் பற்றி தான் இங்கே காண போகிறோம்.

பானரோமிக் சன்ரூஃப்: இந்தியாவில் சன்ரூஃப் என்ற ஆப்ஷன் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பலர் இந்த சன்ரூஃப் ஆப்ஷனை விரும்பி வருகிறார்கள். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சன்ரூஃப் ஆப்ஷனே கிடையாது. சிங்கிள் பேன் சன் ரூஃப் ஆப்ஷன் கூட கிடையாது. ஆனால் இந்த காரில் முழுமையான பானரோமிக் சன்ரூஃப் ஆப்ஷன் இருக்கிறது.
அடாஸ்: அடாஸ் எனப்படும் டிரைவர் அசிஸ்டென்ட் தொழில்நுட்பம் இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. ரூபாய் 15 லட்சத்துக்கு விற்பனையாகும் காரில் கூட இந்த அம்சம் இருக்கிறது. இது காரின் பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை எண்டேவர் காரில் இந்த அடாஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் தற்போது விற்பனையாகி வரும் பார்ச்சூனர் காரில் இல்லை.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்: புதிய தலைமுறை எண்டேவர் காரில் தற்போது 12.4 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. காரில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரே இருக்கிறது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை, எண்டேவர் காரில் 12 இன்ச் போர்ட்ரேட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் காரில் 8 இஞ்ச் சிஸ்டம் தான் இருக்கிறது.
எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்: எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் என்பது பெரிய ரக கார்களுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது. டிரைவருக்கு சுலபமான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதற்காக இது வழங்கப்படுகிறது. எண்டேவர் காரில் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் ஃபார்ச்சூனர் காரில் சாதாரண மேனுவல் பார்க்கிங் பிரேக் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

360 டிகிரி கேமரா: புதிய தலைமுறை என்டேவர் காரில் அந்த செக்மெண்டிலேயே முதல்முறையாக 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதிக நெருக்கடி உள்ள பகுதிகளில் இது மிக பயனுள்ளதாக இருக்கும். ஃபார்ச்சூனர் காரில் ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.
ஹீட்டட் சீட் மற்றும் ஸ்டேரிங் வீல்: ஃபார்ச்சூனர் காராக இருந்தாலும் சரி, எண்டேவர் காராக இருந்தாலும் சரி, இரண்டு காரிலும் வென்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. எண்டேவர் காரில் கூடுதலாக ஹீட்டட் சீட்டுகள் மற்றும் ஹீட்டட் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற அதிக வெப்பம் கொண்ட நாடுகளில் இந்த அம்சம் மிக முக்கியமான தேவையாக இல்லை என்றாலும், குளிர் பிரதேசங்களில் இதை பயன்படுத்தலாம்.

டிரைவ் மோடுகள்: டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொறுத்தவரை நார்மல், ஸ்போர்ட் மற்றும் எக்கோ ஆகிய மூன்று விதமான டிரைவ் மோடுகள் மட்டுமே உள்ளன. எண்டேவர் காரை பொருத்தவரை ஆன்-ரோடு, ஆஃப்-ரோடு டிரைவ் மோடுகளான ஸ்லிப்பரி, மட், சாண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட டிரைவிங் ஆப்ஷன்கள் உள்ளன.
பவர்டு மூன்றாவது வரிசை சீட்டுகள்: புதிய தலைமுறை எண்டேவர் ஒரு காரில் மூன்றாவது வரிசை சீட்டை ஒரு பட்டனை அழுத்தினால் தானாக சீட் மடிந்து கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இதை மேனுவலாக மட்டுமே செய்ய முடியும். இது ஒரு முக்கியமான குறையாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய ரக முழு சைஸ் கார்களை பெரும்பாலும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் தான் வாங்குகிறார்கள். இவர்கள் அதிக அம்சங்களை கார்களில் எதிர்பார்ப்பார்கள். இந்நிலையில் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக இந்த ஃபோர்டு எண்டேவர் கார் அறிமுகமாகியுள்ளது நிச்சயம் அவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications









