லாபத்தை அதிகப்படுத்த கார் உற்பத்தியை நிறுத்தும் முன்னணி நிறுவனம்.. 6 வாரங்களுக்கு நிறுத்த போறாங்களா!
ஃபோர்டு (Ford) நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. 2021 ஆம் ஆண்டிலேயே இந்தியாவை விட்டு ஃபோர்டு வெளியேறியது. போதிய அளவு வரவேற்பு இல்லாத காரணத்தினாலேயே இந்த நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. இந்த நிலையிலேயே அது மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே சமீப சில நாட்களாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபோர்டு நிறுவனம் லாபத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கார் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பிட்ட ஓர் கார் மாடலின் உற்பத்தி பணிகளையே நிறுத்த ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. எஃப் 150 லைட்னிங் மின்சார பிக்-அப் டிரக் (F-150 Lightning Electric Pick-Up Truck) உற்பத்தியையே தற்காலிகமாக நிறுத்த ஃபோர்டு திட்டமிட்டு இருக்கின்றது. இதற்கான அறிவிப்பையே அது தற்போது அறிவித்துள்ளது.

நவம்பர் 18 தொடங்கி ஜனவரி 6 ஆம் தேதி வரை என மொத்தமாக ஆறு வாரங்களுக்கு இந்த உற்பத்தி நிறுத்தமான நீடிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவானது நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளின் விற்பனை வளர்ச்சிக்காகவும், லாபத்தன்மையை மேம்படுத்தும் நோக்கிலும் எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
ஃபோர்டு நிறுவனம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க திட்டமிட்டு இருக்கின்றது. இந்த விடுப்பளிப்பினால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பைக் குறைக்கும் பொருட்டு அது எல்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கின் உற்பத்தியை ஆறு வாரங்களுக்கு நிறுத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
இதனால் மற்ற அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களின் உற்பத்தியை அதிகப்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது. இதனால், எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் நிறுவனத்தின் மோசமாக விற்பனையாகும் வாகனம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அது பிராண்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் ஆகும்.
இருப்பினும், ஹைபிரிட் மற்றும் ஐசிஇ வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இந்த வாகனத்திற்கு சற்று குறைவாகவே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் ஆறு வாரங்களுக்கு அதன் உற்பத்தியை நிறுவனத்துவதாக ஃபோர்டு துணிச்சலாக அறிவித்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, தன்னுடைய மின்சார வாகனங்களுக்கான திட்டத்தை பின்வாங்கத் தொடங்கியிருக்கின்றது, ஃபோர்டு.
அந்த நிறுவனம் புதிதாக ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை அது பின் வாங்கிக் கொண்டது. அதேவேளையில், எஃப்-150 மாடலில் புதிய தேர்வை இணைக்க அது பிளான் போட்டுள்ளது.
இதுதவிர, தன்னுடைய முதலீடுகளை ஹைபிரிட் வாகனங்களில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் ஹைபிரிட் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மின்சாரம் மற்றும் ஐசிஇ (ICE) என இரண்டு வசதிகளையும் கொண்டதே ஹைபிரிட் வாகனங்கள் (Hybrid Vehicles) ஆகும்.
உலக சந்தையில் ஃபோர்டு எஃப்150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் நான்கு விதமான தேர்வுகளில் விற்கப்படுகின்றது. எஃப்150 லைட்னிங் எக்ஸ்எல்டி (Ford F-150 Lightning XLT), எஃப்150 லைட்னிங் ஃப்ளாஷ் (F-150 Lightning FLASH), எஃப்150 லைட்னிங் லேரியட் (F-150 Lightning LARIAT) மற்றும் எஃப்150 லைட்னிங் பிளாட்டினம் (F-150 Lightning Platinum) ஆகியவையே அவை ஆகும்.
இதில் ஒன்றுகூட இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. மேலும், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பதும் தெரியவில்லை. இப்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் இந்த வாகனத்தின் வருகை பற்றிய வெளியாகவில்லை. அதேவேளையில், ஃபோர்டு மறு வருகையைத் தொடர்ந்து நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களையே விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சீக்கிரமே ஃபோர்டு நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எப்போது என்பதுதான் இதுவரை அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஃபோர்டு மின்சார கார்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








